ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயலியான சாட்ஜிபிடி, அடுத்த வாரம் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாட்ஜிபிடி செயலி:
மனித குலம் கண்டறிந்த தொழில்நுட்பத்தில் தற்போதைய சூழலில் உச்சபட்சமாக கருதப்படுகிறது செயற்கை நுண்ணறிவு திறன். இதனை அனைத்து மக்களுக்குமானதாக மாற்றியது ஓபன்ஏஐ நிறுவனம். அந்த நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி செயலி அனைத்து தரப்பினராலும் வெகுவாக கொண்டாடப்பட்டது. சிறு சந்தேகங்கள் தொடங்கி பெரும் பிரச்னைகளுக்கும் நேர்த்தியான தீர்வு வழங்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த செயலி மூலம் மனிதர்களின் வேலைகள் பறிபோகும் சூழல் உள்ளதாகவும் கடும் குற்றச்சாட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டிலும் சாட்ஜிபிடி செயலி:
இந்நிலையில், முதற்கட்டமாக ஐஒஎஸ் பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட சாட்ஜிபிடி செயலி அடுத்த வாரம், ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என ஓபன்ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. ஐஓஎஸ் சாதனங்களில் செயல்படும் அதே அம்சங்களுடன் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் செயல்படும் விதமாக புதிய சாட்ஜிபிடி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயனர்கள் தங்கள் உரையாடல்களையும் விருப்பங்களையும் பல சாதனங்களில் தடையின்றி சிங்க் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் AI சாட்போட்டுடன் மென்மையான மற்றும் தொடர்ச்சியான தொடர்புகளை பெறலாம்.
இந்தியாவில் எப்போது கிடைக்கும்?
அடுத்த வாரம் ஆண்ட்ராய்ட் செயலி வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், தேதி தெளிவாக குறிப்பிடப்படவில்லை. முதற்கட்டமாக அமெரிக்காவில் தான் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும் எனவும், அதைதொடர்ந்து படிப்படியாக உலகம் முழுவதும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் சாட்ஜிபிடி செயலி எப்போது அறிமுகமாகும் என்ற தெளிவான விவரங்கள் இல்லை. அதேநேரம், சாட்ஜிபிடி செயலிக்கு கூகுள் பிளே ஸ்டோரில் சென்று பயனாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் செயலி பயன்பாடு நேரலைக்கு வந்தவுடன் பயனர்கள் தகவலை பெறுவார்கள்.
புதிய அம்சம் என்ன?
ஓபன்ஏஐ நிறுவனம் அடுத்ததாக customized instructions எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அம்சம் “AI சாட்போட்டுக்கு குறிப்பிட்ட வழிமுறைகள் மற்றும் தகவலை வழங்க பயனர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது” இது எதிர்கால உரையாடல்களுக்காக சேமிக்கப்படும். தற்போதைய சூழலில் இந்த கஸ்டமைஸ்ட் அம்சமானது பீட்டா பயனாளர்கள் மற்றும் கட்டணம் செலுத்திய சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. எதிர்காலத்தில் இது அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய ஓபன் ஏஐ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பயனாளர்களின் அனுபவம் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.