நிலவில் ’கந்தகம்’ (sulphur) என்ற தனிமம் இருப்பதை ரோவர் ’The Alpha Particle X-ray Spectroscope (APXS) ’ என்ற தொழில்நுட்பம் மூலம் மீண்டும் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பான புதிய வீடியோவையும் இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, கடந்த மாதம் 14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23-ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதோடு, இது தொடர்பாக ஆராய்ச்சிகளை லேண்டர், ரோவர் வெளியிட்டு வருகிறது.
நிலவில் கந்தகம் இருப்பதை மீண்டும் உறுதிசெய்த ரோவர்
நிலவில் கந்தகம் இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளது. நிலவில் கனிமம் இருப்பதை, ரோவரில் அனுப்பப்பட்ட லேசர் இன்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி கண்டுபிடித்துள்ளது. அதேபோல, எதிர்பார்த்தபடியே, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட வேதியியல் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனை (H) தேடும் பணி நடந்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தி ஆல்பா பார்டிக்கல் எக்ஸ்.ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (’The Alpha Particle X-ray Spectroscope (APXS)) என்ற தொழில்நுட்பம் மூலம் ‘கந்தகம்’ இருப்பதை ரோவர் லேண்டர் மீண்டும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பான வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதில், ’Hinge’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோவரில் உள்ள கருவி ஆராய்ச்சி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது அகமதாபாத்தில் உள்ள ஆராய்ச்சி அலுவகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.