தமிழகம் முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமலாகிறது. அதனடிப்படையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியிலும் வரும் 1-ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான சுங்க வரி கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி வரையிலான 74 கிலோ மீட்டர் தூரத்திற்கான நான்கு வழிச்சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது.


சென்னையில் இருந்து வட மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்ல கூடிய இந்த விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆண்டுத்தோறும் செப்டம்பர் மாதத்தில் வாகனங்களுக்கான சுங்க வரி கட்டண விலை உயர்த்தப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இந்த ஆண்டிற்கான திருத்தப்பட்ட புதிய கட்டண விவரங்களை அந்த சுங்கச்சாவடி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து செல்லும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் ஒருமுறை பயணிக்க இதுநாள் வரை ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 5 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டு 105 ரூபாயாகவும், பலமுறை பயணிக்க 150 ரூபாயில் இருந்து 155 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும், இலகுரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க 180 ரூபாயில் இருந்து 185 ரூபாயாகவும், பலமுறை பயணிக்க 265 ரூபாயில் இருந்து 270 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேப்போல் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 15 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது.