சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் விண்கலம் தரையிறங்கும் நிகழ்வு சுவாரஸ்யமான தகவல்களுடன், நேஷனல் ஜியோகிரபி மற்றும் ஹாட் ஸ்டார் செயலியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


தரையிறங்க தயாரான சந்திரயான்:


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம், கடந்த மாதம் 14ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்டது. 40 நாட்கள் பயண திட்டத்தின்படி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள,  விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட உள்ளது. இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த தரையிறக்கம் நடைபெற்றால், நிலவின் தென்துருவத்தில் லேண்டரை இறக்கி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் முதல் நாடு என்ற வரலாற்றுப் பெருமையை இந்தியா பெறும். 14 நாட்கள் ரோவர் தனது ஆய்வுப்பணியை முடித்தால், நிலவு தொடர்பாக இதுவரை யாரும் அறிந்திடாத பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை மனித இனத்திற்கு இந்தியாவால் வழங்க முடியும். 



நேஷனல் ஜாகிரபி தொலைக்காட்சியில் நேரலை:


இந்நிலையில் தான், விக்ரம் லேண்டர் தரையிறங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, பல்வேறு கூடுதல் சுவாரஸ்ய தகவல்கள் உடன் நேஷனல் ஜாகிரபி தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஒடிடி தளமான ஹாட் ஸ்டார் செயலியிலும் இந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மாலை 4 மணிக்கு தொடங்கப்பட உள்ள இந்த நேரலை நிகழ்ச்சியில், விண்வெளி ஆராய்ச்சி துறையை சேர்ந்த பல்வேறு மூத்த விஞ்ஞானிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்க உள்ளனர்.



4 மணிக்கு தொடங்கும் நேரலை:


#countdowntohistory என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை கவுரவ் கபூர் தொகுத்து வழங்க உள்ளார். இதில், விண்வெளி தொடர்பான சந்திரயான் 3 பயணம் மற்றும் எதிர்கால ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். 


சிறப்பு விருந்தினர்கள்:


அதன்படி, விண்வெளி ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ், ராகேஷ் ஷர்மா மற்றும் இஸ்ரோவின் தலைவர் எஸ். சோமநாத் உள்ளிட்டோர் சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதி கட்டம் தொடர்பாக விளக்க உள்ளனர். அவர்களோடு, டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மையத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீஜன் பால் சிங், சர்வதேச விண்வெளி நிலையத்தின் முன்னாள் தளபதியான கிறிஸ் ஹாட்ஃபீல்ட் மற்றும் நாசாவின் வாயேஜர் இன்டர்ஸ்டெல்லர் செய்தியின் கிரியேட்டிவ் இயக்குனரும், எம்மி விருது பெற்ற எழுத்தாளருமான ஆன் ட்ரூயன் ஆகியோரும் இந்த நேரலையில் பங்கேற்க உள்ளனர். இவர்கள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா படைக்க உள்ள புதிய வரலாற்று சாதனை தொடர்பாக விரிவாக பேசி பல்வேறு தகவல்களை பகிர உள்ளனர்.