வடகிழக்கு பருவமழை காலத்தின் போது தூத்துக்குடியில் பெய்த மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர்,தபால் தந்தி காலனி, ராஜீவ் நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளை மழை நீர் சூழ்ந்து நின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் இருந்தது. இதற்கு காரணமாக பக்கிள் ஓடையை தூர்வாரததும் தான் காரணம் சொல்லப்பட்டது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக பக்கிள் ஓடை தூர்வாரப்பட்டது. ஆனாலும் மழை பொய்த்து போனதால் பாதிப்பு ஏற்படவில்லை.
ஏபிபி நாடு செய்தி எதிரொலி:
இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு மாத காலத்தில் துவங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கிய மழை நீர் வடிகாலான பக்கிள் ஓடையை ஆக்கிரமித்து உள்ள நாணல்களும், ஆகாயத்தாமரைகளும், குப்பைகளும் அடர்ந்து கிடக்கின்றன. இது குறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பக்கிள் ஓடையை சுத்தம் செய்யும் பணியை துவங்கி வைத்து பார்வையிட்டார். அவருடன் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார்,மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஓடை தூர்வாரும் பணி தீவிரம்:
வடகிழக்கு பருவமழையின் போது தண்ணீர் சீராக செல்லும் வகையில் மூணாவது மைலிலிருந்து திரேஸ்புரம் கடற்கரை பாலம் வரையிலான ஆறு கிலோமீட்டர் தூரம் வரை பக்கிள் ஓடையில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகளை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடர்ச்சியாக ஒரு மாத காலம் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கிள் ஓடையில் பிளாஸ்டிக் கவர்கள் கேரி பைகள் அதிக அளவு கிடக்கின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் கேரி பைகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை வீடு தேடி குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பாலம் பகுதியில் மாநகரின் ஒட்டுமொத்த கழிவு நீர் ஒடையான பக்கிள் ஓடையின் மொத்தக் கழிவுகளும் கடற்கரை பகுதியில் கலப்பதால் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கடல் நீர் கருமை நிறமாக காட்சியளிக்க கூடிய சூழல் உள்ளது. மேலும் இப்பகுதியில் சிறிய வகை நாட்டு படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் இந்த கழிவு நீரில் இறங்கி தான் படகில் ஏறி தான் மீன் பிடிக்க செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மீனவர்கள் வேதனை:
தூத்துக்குடி நகரில் ஒட்டுமொத்த கழிவுகள் ஆங்காங்கே அகற்றப்பட்டாலும் கூட கடலில் கலப்பதை முற்றிலுமாக தடுக்கவில்லை என கூறும் மீனவர்கள் கடலில் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்க்கூறும் மீனவர்கள், கடலில் கழிவுகள் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் அழியும் சூழல் உள்ளது. மேலும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள பகுதியிலேயே கழிவுகள் கலப்பதை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக தடுக்க வேண்டும் என்கின்றனர்