நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி  வெளியாகி சாதனை படைத்த வெப் தொடர்தான் ஸ்குவிட் கேம். கொரியன் மொழியில் உருவான இந்த சீரிஸ் ஆங்கிலம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மொழிகளில் மட்டும் டப் செய்து வெளியிடப்பட்டது. இதனை கொரியாவின் இளம் இயக்குநர்  Hwang Dong-hyuk என்னும் தென் கொரிய கலைஞர் இயக்கியிருந்தார். நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அதுவரையில் பெறாத அங்கீகாரத்தை ஸ்குவிட் கேம்ஸ் பெற்றது. அமெரிக்காவில் டாப் 10 லிஸ்டில் முதல் இடத்தை நீண்ட காலமாக தக்கவைத்தது ஸ்குவிட் கேம். மேலும் அமெரிக்காவிl அதுவரையில் எந்த ஒரு கொரியன் சீரிஸுக்கும் இப்படியான வரவேற்பும் கிடைத்ததில்லை என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.




பொதுவாகவே ஒரு படம் அல்லது இது போன்ற வெப் சீரிஸ் ஹிட் அடித்தால் அந்த படம் தொடர்பான , அல்லது படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் தொடர்பான புகைப்படங்களை மொபைல் மற்றும் லேப் டாப் உள்ளிட்ட சாதனங்களில் wallpaper -ஆக செட் செய்வது, themes ஐ டவுன்லோட் செய்வது , மேலும் அது தொடர்பாக ஏதேனும்   விளையாட்டுகள் இருந்தால் அதனை டவுன்லோட் செய்வது போன்ற பல முயற்சிகளில் ஈடுபடுவோம். இதனை நன்கு அறிந்த சில வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதற்காக  நூற்றுக்கணக்கான  செயலிகளை பிளே ஸ்டோரில் களமிறக்கிவிடுவார்கள். அப்படிதான் இன்று ஸ்குவிட் கேம் என்ற புகழ்பெற்ற வெப் தொடர் தொடர்பான செயலிகள் பிளே ஸ்டோரில் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன.


அதில் ஒரு ஸ்குவிட் கேம் வால்பேப்பர் செயலியில் மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ReBensk என்னும் ட்விட்டர் முகவரி கொண்ட நபர் வெளியிட்ட அறிவிப்பில் squid game wallpaper என்னும் செயலியில் தீங்கிழைக்கும் “ஜோக்கர்” வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  squid game wallpaper  அப்ளிகேஷனை இதுவரையில் 5 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில் சிலர் தங்களுக்கு தெரியாமலேயே விளம்பர மோசடி . அல்லது விலை உயர்ந்த  எஸ்.எம்.எஸ் பிளான்களை ஆக்டிவேட் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வாளர் தெரிவிக்கிறார்.






விஷயத்தை அறிந்த கூகுள் நிறுவனம் , உடனடியாக அந்த செயலியை தனது பிளே ஸ்டோர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது. என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகளை கூகுள் அதிகப்படுத்தினாலும் , பிளே ஸ்டோர் பக்கங்களில் தீங்கிழைக்கும் செயலிகள் உள்நுழைவதை கண்டறிவது கடினம் என்கிறனர் மால்வேர் ஆராய்ச்சியாளர்கள்.  மேலும் ஸ்குவிட் கேம் தொடரில் வரும் பிரபல விளையாட்டான , ரெட் லைட் ,கிரீன் லைட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள "Squid Games—The Game"  என்ற செயலியை இதுவரையில் மில்லியன் கணக்கானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆனால் அது அதிகாரபூர்வமற்ற செயலி  என்றாலும் அதில் ஆபத்தில்லை என்கின்றனர். ஆனாலும் அதிகாரப்பூர்வமற்ற செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யும் பொழுது விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்கிறனர் வல்லுநர்கள்.