தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் சுமார் 25 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். இந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து கோழிப் பண்ணை தீவனத்திற்காக விற்பனை செய்து வருகின்றனர். சாதாரணமாக மக்காச்சோளம் 60 நாட்களில் வளரும் பயிர். இதில் ஒரு செடிக்கு 8 முதல் 10 கதிர்கள் வரை இருக்கும், ஒரு ஏக்கருக்கு 10 டன் வரை மகசூல் கிடைக்கும். நல்ல வருவாயும் கிடைக்கும். இந்நிலையில் ஒரு சில விவசாயிகளிடம் தனியார் நிறுவன ஊழியர்கள் மக்காச்சோளம் புதிய ரக விதைகள் குறித்து விவரித்துள்ளார். இது இனிப்பு வகை மக்காச்சோளம், 50 நாட்களில் அறுவடைக்கு வரும். ஒரு டன்னுக்கு 7,500 வரை கொடுத்து, நாங்களே அறுவடை செய்து கொள்வோம் என்றும், சோளத்தட்டுகளுக்கு கூட தனியாக விலை கொடுத்துவிட்டு நாங்களே அறுவடை செய்து கொள்கிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் விதைக்கு பணம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி ஒரு சில விவசாயிகள், 7000 முதல் 10,000 வரையில் செலவு செய்து சோள விதைப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மக்காச்சோள பயிர் செழித்து, நல்ல மகசூல் பிடித்துள்ளது. தற்போது மக்காச்சோளம் அறுவடைக்கு தயாரான நிலையில் ஒரு செடியில் 2, 3, கதிர்கள் மட்டுமே வளர்ந்து உள்ளது. ஆனால் சோளக் கதிர் 60 நாட்களை கடந்து அறுவடைக்கு வந்துள்ள நிலையில், மக்காச்சோள கதிரில் பால் பிடிக்காமல் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து விதை கொடுத்தவரை அனுககயுள்ளனர். அப்பொழுது 75 நாட்களுக்குப் பிறகு செடி வளர்ச்சி அடையவில்லை. ஒரு செடியில் மூன்று கதிர் மட்டுமே வளர்ந்துள்ளது. கதிரை உரித்துப் பார்த்தால் கொட்டையும், தரமானதாக இல்லை. மேலும் பூச்சி தாக்குதலும் உள்ளது. பூச்சி தாக்குதலை தடுக்க மருந்து தெளித்து பயனில்லை என விதை வழங்கியவரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நேரில் வந்து பார்த்த ஊழியர், இந்த இனிப்பு வகை, கொட்டைகள் வைக்காது, இதுப்போன்று தான் இருக்கும், இதனை நாங்களே அறுவடை செய்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
ஆனால் சிறியதாக இருப்பதை மட்டுமே அறுவடை செய்வோம். ஏனென்றால், இது விமானம் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும். ஒரு டன்னுக்கு ரூ.7,500 கொடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் அறுவடை செய்வதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொஞ்சம் பெரிய கதிர்களை அறுவடை செய்வதில்லை, சிறிய கதிர்கள் மட்டுமே அறுவடை செய்தனர். தொடர்ந்து அவர்கள் அறுவடை செய்யும் கதிர்களை பார்த்தால், ஒரு ஏக்கருக்கு ஒரு டன் கூட வாராது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் கதிரை அறுவடை செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளனர். உங்கள் பேச்சை கேட்டு சாகுபடி செய்தால், 25,000 முதல் 50,000 நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் வட்டிக்கு கடன் வாங்கி மக்காச்சோளம் சாகுபடி செய்து ஏமாந்து விட்டேம். மக்காச்சோளம் அறுவடை செய்யாமலேயே நிலத்தில் மாடுகளை விட்டு மேய்ந்து வருகிறோம். இந்த பகுதியில் சுமார் 20 ஏக்கர் மக்காச்சோளம் பாதிப்படைந்துள்ளது. இதுப்போன்று விவசாயிகளை ஏமாற்றும் நிறுவனத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இழப்பை ஈடுகட்ட அரசு உதவி தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.