பூமியில் இருந்து செவ்வாய்க்கும், நிலவுக்கும் பயணம் மேற்கொள்ளும் புல்லட் ரயிலை உருவாக்க ஜப்பான் ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
விண்வெளிக்கு புல்லட் ரயில்:
மனிதனுக்கு பூமியில் வாழ்ந்து சலித்துவிட்டதோ என்னவோ. தற்போது வேற்றுகிரகங்களில் குடியேறுவது தொடர்பாக யோசிக்க ஆரம்பித்து பல்வேறு நாடுகள் அதற்கான செயல்களிலும் இறங்கிவிட்டன. உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் விண்வெளி கப்பல் மூலம் செவ்வாய்க்கு மனிதனைக் கொண்டுச்செல்லவும், அங்கு கட்டுமானங்களை மேற்கொள்வதற்கான வேலைகளிலும் இறங்கியிருக்கிறார். சீனாவும் செவ்வாய் கோளை ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கி தனது வின்கலம் மூலம் ஆய்வு நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது புல்லட் ரயில் மூலம் செவ்வாய் மற்றும் நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தை அறிவித்திருக்கின்றனர் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்.
ஹெக்ஸாஜென் ஸ்பேஸ் ட்ராக் சிஸ்டம்:
ஜப்பானின் க்யோடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹியூமன் ஸ்பேஸாலஜி செண்டரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மற்றும் கஜிமா கார்ப்பரேஷன் என்ற கட்டுமான நிறுவனமும் இணைந்து தங்களது திட்டம் பற்றி சமீபத்தில் அறிவித்தனர். இந்த போக்குவரத்து அமைப்பானது ஹெக்ஸாஜென் ஸ்பேஸ் ட்ராக் சிஸ்டம் என்று அழைக்கப்படும் என்றும், இந்த அமைப்பு மூலமாக தான் விண்வெளி ரயிலானது பூமிக்கும், நிலவுக்கும், செவ்வாய்க்கும் இடையில் பயணிக்கும் என்று கூறியுள்ளனர்.
ஹெக்ஸாகான் கேப்ஸ்யூல்:
இந்த ரயில்கள் ஜப்பானில் இயங்கும் புல்லட் ரயில்கள் போலவே இருக்கும் என்றும், ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்டும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு ஹெக்ஸாகான் கேப்ஸ்யூலில் அடைக்கப்பட்டு ராக்கெட் எஞ்சின் அல்லது லீனியர் மோட்டார் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று கூறியுள்ளனர். பேஸ் ஸ்டேசனுக்குச் சென்றவுடன் தனித்தனியாக ஒவ்வொரு காரிலும் பிரிக்கப்படுவார்கள். பின்னர் ராக்கெட் எஜெக்சன் கருவிகள் மூலமாக விண்வெளியைவிட்டு வெளியேறி ஒவ்வொரு கோளின் ஈர்ப்புப் பகுதிக்குள்ளும் வந்துவிடும்.
100 ஆண்டுகள் ஆகும்:
இந்த ஸ்பேஸ் ரயில்கள் மக்களை செயற்கையாக உருவாக்கப்பட்ட ஈர்ப்பு விசை உள்ள வாழும் பகுதிக்குள் கொண்டுச் செல்லும். இந்த இடத்தில் பூமியில் உள்ள புவிஈர்ப்பு விசையைப் போன்றே நிலவிலோ அல்லது செவ்வாயிலோ இருக்கும். நிலவில் உருவாக்கப்படும் வசதியானது லூனார் க்ளாஸ் என்றும் செவ்வாயில் இருக்கும் இந்த வசதியானது மார்ஸ் க்ளாஸ் என்றும் அழைக்கப்படும். இந்த இடங்களில் பூமியில் உள்ளது போன்றே காடுகள், நீரூற்றுகள் போன்றவை இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற திட்டம் வேறு எந்த நாட்டிடமும் இல்லை என்று ஹியூமன் ஸ்பேஸாலஜி செண்ட்டரின் இயக்குநர் யோசுகி யமஷிகி கூறியுள்ளார். இந்த திட்டத்தின் எளிமையான அமைப்பை நிலவில் 2050க்குள் உருவாக்கிவிட முடியும் என்றும், முழுமையான திட்டத்தை நிறைவேற்ற நூறு ஆண்டுகளாவது ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஆராய்ச்சிக்கு ஒப்புதல்:
எதுபோன்ற சூழ்நிலை மற்றும் வசதிகள் இவற்றை அடையத் தேவைப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல எதுபோன்ற தொழில்நுட்பங்கள் உணவு, உடை, குடியிருப்புகள் மற்றும் சமூக அமைப்பை நிலவிலும், செவ்வாயிலும் உருவாக்கத் தேவை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஆராய்ச்சிகளைத் தொடங்க உள்ளதாக கஜிமா கார்ப்பரேசன் மற்றும் க்யோட்டோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.