68 ஆவது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழை பொருத்தவரை அமேசான் ப்ரைமில் வெளியான சூரரைப்போற்று, சோனி லைவில் வெளியான சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும், நெட் ஃப்ளிக்ஸில் வெளியான மண்டேலா உள்ளிட்ட படங்கள் விருதுகளை வாரி குவித்து இருக்கின்றன.  


கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஓடிடியின் ஆதிக்கம் தமிழ் சினிமாவிற்குள் நுழைய ஆரம்பித்தது. அதற்கு ஆரம்பபுள்ளியாக சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று அமைந்தது. அதற்கு முன்னதாக சின்ன சின்ன படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்ட போதும், ஸ்டார்களின் படங்கள் எதுவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்படவில்லை.


ஆரம்பபுள்ளியாக அமைந்த சூரரைப்போற்று


இந்த நிலையில்தான் சூர்யா சூரரைப்போற்று படத்தை ஓடிடித்தளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்தார்.இந்த அறிவிப்பிற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, அப்படி வெளியிட்டால் வரும் காலங்களில் சூர்யா, ஜோதிகாவின் படங்கள் திரையரங்களில் வெளியிடப்படாது என்று தெரிவித்தனர். ஆனால், அனைத்து எதிர்ப்புகளையும் மீறி சூரரைப்போற்று படத்தை ஓடிடியில் வெளியிட்டார் சூர்யா.


படம் மிகப் பெரிய ஹிட்டடித்தது. அவர் ஆரம்பித்து வைத்த அந்தப்புள்ளி, அதன் பின்னர் கோலமாக மாறியது என்றே சொல்லலாம். ஆம் அதன் பின்னர் பல ஸ்டார்களின் படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டன. தயங்கி நின்ற சின்னப்படங்களும் ஓடிடியின் பக்கம் வந்தன. அந்த வரிசையில் யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படமும் ஓடிடியில் வெளியிடப்பட்டது. நல்ல கதை சொல்லலுக்கு பேர் போன வசந்தகுமார் இயக்கத்தில் வெளியான சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் ஓடிடியில் வெளியிடப்பட்டது. 


இப்படி ஓடிடியில் வெளியிடப்பட்ட இந்த மூன்று படங்களும் தற்போது தேசிய விருதுகளை தட்டிச்சென்றுள்ளன இதில் சூரரைப்போற்று திரைப்படம் மட்டும் 5 பிரிவிகளின் கீழ் தேசிய விருதுகளை தட்டிச்சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது 


விருதுகளின் விபரம்:


தமிழ்: 



  • சிறந்த படம் - சூரரைப்போற்று 

  • சிறந்த நடிகர் - நடிகர் சூர்யா (சூரரைப்போற்று ) ( அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொள்கிறார்)

  • சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார் 

  • சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )

  • சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)

  • சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா) 

  • சிறந்த அறிமுக இயக்குநர் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா) 

  • சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் ( சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)

  • சிறந்த தமிழ் படம் - சிவ ரஞ்சனியும் சில பெண்களும்

  • சிறந்த துணை நடிகை - லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி