பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் அனைத்து ப்ரீபெய்ட்  வாடிக்கையாளர்களுக்கும் வேலிடிட்டியை இலவசமாக அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு வேலிடிட்டி முடிவடையும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச சலுகைகள் வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.


கொரோனா இரண்டாவது அலை மற்றும் டக் தே புயல்  காரணமாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களால் ரீ சார்ஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், அவர்களுக்கு 100 நிமிட  இலவச அழைப்பை வழங்குவதாகவும் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.  பிஎஸ்என்எல்-ன் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மே 31 வரை வேலிடிட்டி கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. வேலிடிட்டி காலம் நீட்டிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் இந்த கடினமான காலங்களில்  அழைப்புகளை தொடர்ந்து பெற முடியும். 




பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பிரவீன் குமார் புர்வார், வாடிக்கையாளர்கள்  ரீசார்ஜ் செய்வதற்காக ஆன்லைன் விருப்பங்களைத் தேட வேண்டும் என்றும், சில்லறை கடைகளை நம்பக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  "இந்த கடினமான காலகட்டத்தில் பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய உறுதிபூண்டுள்ளது.  மேலும் வாடிக்கையாளர்கள்  கோ டிஜிட்டலில்  செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கு விருப்பமான ரீசார்ஜ்களை செய்ய மை பிஎஸ்என்எல் மொபைல் ஆப் உள்ளது.  அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிஎஸ்என்எல் வலைத்தளம் மற்றும் பிற பிரபலமான வேலட் சேவைகள் ஆகியவை உள்ளன. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் மொபைலை ரீசார்ஜ் செய்வதற்காக மை பிஎஸ்என்எல் பயன்பாட்டுடன் 4 சதவீத முன்பதிவு தள்ளுபடியைப் பெறலாம் ”என்று கூறினார்.




கடந்த மாதம், பிஎஸ்என்எல் தனது  அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ. 398  ஸ்பெஷல் டாரிஃப்பை அறிவித்தது. இந்த விளம்பர சலுகை ஏப்ரல் 9 ஆம் தேதியுடன் முடிவடையும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இந்த திட்டம் ஜூலை 8 வரை கிடைக்கப்பெறுகிறது. இதேபோன்று ஏற்கனவே முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவித்த நிலையில், தற்போது பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தனது வாடிக்கையாளர்களுக்காக இந்த சலுகையை அறிவித்துள்ளது. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் குறைவை சந்தித்துக் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல், இது போன்ற அறிவிப்புகள் மூலம் தனியார் நிறுவனங்களுடன் தனது வாடிக்கையாளர்களையும் தக்கவைக்க முயற்சிக்கிறது. தொலை தொடர்பு நிறுவனங்களின் இந்த அறிவிப்பு, ஊரடங்கு காலத்தில் கடும் நெருக்கடியில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ரீசார்ஜ் செய்து பிழைப்பு நடத்தும் கடைக்காரர்களுக்கு, இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் ஆன்லைன் முறையில் ரீசார்ஜ் செய்து கொள்வதால் கடையை தேடி வருவதை எதிர்காலத்தில் பலரும் தவிர்க்க வாய்ப்புள்ளது.