கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் அவர்களுக்கு மொபைல் போன் பயன்பாடு மிகவும் அவசியமானதாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தற்போது சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்தவகையில் கடந்த இருநாட்களுக்கு முன்பாக ஜியோ நிறுவனம் ஒரு புதிய இலவச திட்டத்தை அறிவித்தது. 


இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது புதிய இலவச திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் தனது 49 ரூபாய் திட்டத்தை ஒரு முறை இலவசமாக வழங்க உள்ளது. இந்தத் திட்டம் குறைவாக ஊதியம் சம்பதிக்கும் 55 மில்லியன் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் 38 ரூபாய்க்கான டாக் டைம் மற்றும் 100 எம்பி டேட்டா 28 நாட்களுக்கு செல்லும். இதை கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது என ஏர்டெல் தெரிவித்துள்ளது. 




மேலும் ஏர்டெல் பிரீபேய்டு வாடிக்கையாளர்கள் 79 ரூபாய் திட்டத்தை தேர்வு செய்தால் அதன் வசதிகள் இரட்டிப்பாக கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் 128 ரூபாய் டாக் டைம் மற்றும் 200 எம்பி டேட்டா 28 நாட்களுக்கு வரும். தற்போது அது இரட்டிப்பாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சலுகைகளும் இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என்று ஏர்டெல் நிர்வாகம் கூறியுள்ளது. 


முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தினமும் 10 நிமிடம் இலவசமாக தர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு வாடிக்கையாளருக்கு 300 இலவச நிமிடங்கள் அளிக்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த தகவல் வந்த இருநாட்களுக்குள் தற்போது ஏர்டெல் தனது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முன்னனி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இருவரும் வழங்கியுள்ள இந்த ஆஃபர். ஊரடங்கு காலத்தில் அதன் ஏழ்மையான வாடிக்கையாளர்களுக்கு பெரியஅளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.