தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது வேகமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 33,000-க்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.


கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சில நாட்களில் இருந்தே, சித்தா மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து பேசுபவர்கள் பலரும், ஆவி பிடித்தலை ஒரு சிகிச்சை முறையாக கடந்த ஒரு வருடமாக ஆங்காங்கே வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீராவி பிடிக்கும் இயந்திரத்தை ரயில்வே காவல்துறையினர் அமைத்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிவரும் இந்நிலையில் நேற்று கோவையிலும், பாஜக சார்பாக மூலிகை நீராவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் மக்கள் அடுத்தடுத்து நீராவி பிடிக்கும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். 










இந்நிலையில், மக்கள் கூடி ஆவிபிடிக்கும் இத்தகைய நிகழ்வுகளை கண்டித்து ட்வீட் செய்திருக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், “இதுபோன்ற நீராவி முறைகள் கொரோனாவை தடுக்கவோ, குணமாக்கவோ முடியாது. இவை ஒரு வெற்றுப்பழக்கம் மட்டுமே. திமுக பகுத்தறிவாளர்கள் நிறைந்த கட்சி. இந்த நிலையில், அரசே இப்படியாக நிரூபணமாகாத மாற்று மருத்துவ முறைகளில் ஈடுபட்டு மனித வளத்தை வீணடிப்பது தகுந்ததல்ல” என்று விமர்சித்திருக்கிறார்.