கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம். 


1.பாடகர், இயக்குனர் அருண்ராஜா காமராஜவின் மனைவி கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தார்.   


2. அரசுக்கு வழிமுறைகள் - ஆலோசனைகளை வழங்கிட அனைத்து சட்டமன்றக் கட்சிகளை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவை முதல்வர் அமைத்தார். அதில் தமிழகத்தில் உள்ள 13 கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  அதிமுகவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. எழிலன் திமுக சார்பில் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் முனிரத்னம், பாமக சார்பில் ஜிகே மணி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 



 


3. நாளை முதல் ரெம்டெசிவிர்மருந்துக்கான தேவையை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக இணையதளத்தில் பதிவிடும் வசதி உருவாக்கப்படுகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு மருத்துவமனைப் பிரதிநிதி நேரடியாக விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது. 


4. கடந்த 24 மணி நேரத்தில் 33,181 பேருக்கு தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 311 பேர் மரணமடைந்தனர். 21, 317 பேர் குணமடைந்தனர். மொத்தமாக சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2,19,342-ஆக உள்ளது.  


5. DRDO உருவாக்கியிருக்கும் 2-DG என்ற மருந்து கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த உதவுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த மருந்தைத் தமிழ்நாட்டில் பயன்படுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்   நடவடிக்கை எடுக்கவேண்டும் என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்தார். 


6. ஏப்ரல் 21- மே 23 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்திற்கு 3,50,000 ரெம்டெசிவிர் குப்பிகள், புதுச்சேரிக்கு 22,000 குப்பிகள் உட்பட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 76 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஏப்ரல் 21 முதல் மே 16 வரை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு, ஏப்ரல் 21- மே 23 வரையிலான காலகட்டமாக புதுப்பிக்கப்படுவதாக, மருந்தகத் துறையும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் அனைத்து மாநிலங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 



 


7. காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சதவ் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார்.


8. மராத்தா சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் பறித்துவிட்ட நிலையில், அவர்களைச் சமாதானப் படுத்தும் நோக்கில், மராட்டிய அரசு SC/ST, OBC-க்கான பதவி உயர்வு இடஒதுக்கீட்டைப் பறித்திருப்பதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். 


9.அதிதீவிர புயலாக மாறியுள்ள டவ்-தே  புயல் நாளை போர்பந்தர் அருகே கரையைக்கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது. குஜராத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 26 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு அவை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


10. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான பதற்றத்தை தணிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சற்று முன் கூடி விவாதித்தது.