தீபாவளி ஆஃபரில் ஐபோன் 13 வாங்க காத்திருப்பவர்களுள் ஒருவராக நீங்கள் இருந்தால் , இது உங்களுக்கு மிகப்பெரிய கவலை அளிக்கும் செய்திதான்.பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோன் மாடலான iphone 13 மற்றும் அதன் பிற மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் பயனாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று கேட்டால் , நிச்சயமாக இல்லை. ஐபோன் 12 ஐ ஒப்பிடும் பொழுது மிகப்பெரிய மாற்றங்கள் எதுவும் iphone 13 இல் இடம்பெறவில்லை. ஆனால்  ஐபோன் 13 விலையில், ஆப்பிள் நிறுவனம் சமரசம் செய்துக்கொள்ளவே இல்லை. இது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது ஒரு புறம் இருக்க , ஐபோன் 13 உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக பிரபல Bloomberg. நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த ஆண்டின் விடுமுறை மாதங்களான, இறுதி மூன்று மாதங்களில் (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) கிட்டத்தட்ட 90  மில்லியன் ஐபோன் 13 மாடல்களை உற்பத்தி செய்ய  ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டிருந்திருக்கிறது ஆனால் ஐபோன் 13க்கு  தேவையான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் இருந்து போதுமான பாகங்கள் பெறப்படவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக போர்ட்காம்( Broadcom ) மற்றும் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்(Texas Instruments)  போன்ற நிறுவனங்களிடம் இருந்து போதுமான அளவில்  உதிரிபாகங்கள் டெலிவரி செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




கொரோனா ஊரடங்கு காரணமாக உலகின் பல சிப்செட் ஆலைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது நிலைமை சரிசெய்யப்பட்டாலும் முன்பிருந்த ஆடர்களை ஈடு செய்யவே சிப்செட் உற்பத்தி நிறுவனங்கள் போராடி வருகின்றன. இதனால் புதிய ஆடர்களை எடுப்பதில் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. ஆப்பிள் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்ததன் அடிப்படையில் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து கொடுப்பதிலும் தற்போது  நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இது ஆப்பிள் நிறுவனத்திற்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான சிப் செட் தட்டுப்பாடு காரணமாக ஆப்பிள் நிறுவனம் இந்த மாதம் உற்பத்தியை தற்காலிகமா நிறுத்தி வைத்துள்ளது. உதிரி பாகங்கள் டெலிவரி செய்த பிறகு மீண்டும் அடுத்த மாதம் தனது உற்பத்தியை தொடங்கும் என கூறப்படுகிறது. ஆனால் தான் எதிர்பார்த்த  90 மில்லியன் இலக்கை ஐபோன் 13 மாடல்கள் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவுதான்.இதன் விளைவாக ஆப்பிள் தனது ஐபோன் 13 மாடல்களின் பட்டியலை தங்களின் ஷோரூமிலிருந்தே நீங்கியுள்ளதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது. சிப்செட் தட்டுப்பாடு ஒரு பக்கம் இருந்தாலும் ஐபோன் 13 க்கான மவுசும் குறைந்துள்ளதால் , நிர்ணயித்த உற்பத்தியை விட குறைந்த அளவிலான ஐபோன் 13 மாடல் மொபைல்போன்களை ஆப்பிள் உருவாக்கலாம். 90 மில்லியன் திட்டமிடலில் இருந்து 10 மில்லியனாக உற்பத்தி இலக்கை ஆப்பிள் மாற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.