பூஜை பண்டிகைகள் விடுமுறை தொடர்ந்து வருவதால், சென்னையிலிருந்த தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக இருக்கும். அவ்வாறு செல்பவர்களுக்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்ப பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையை விட்டு சொந்த ஊர் செல்ல பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவ்வாறு செல்பவர்களுக்கு வசதியாக சென்னையில் மூன்று இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் தொடங்கிய பஸ் போக்குவரத்திற்கு கடுமையான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கிராக்கியான சூழலை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிக கட்டணம் நிர்ணயித்து வருகின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வு தான். இதற்கிடையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, ‛‛ அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். இதுவும் ஒவ்வொரு ஆண்டும் அந்த துறையில் இருக்கும் அமைச்சர்கள் விடுக்கும் வழக்கமான எச்சரிக்கை தான். எச்சரிக்கை ஒருபுறம், எக்கச்சக்க கட்டணம் மறுபுறம் என மற்ற ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடு என உயர்த்தப்பட்டது.
600 முதல் 900 ரூபாய் வரை விற்கப்பட்ட ஆம்னி பஸ் டிக்கெட்டுகள் 2500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதெல்லாம் ஏதோ திரைமறைவாக நடைபெறும் விசயமல்ல. பட்டவர்த்தனமாக ஆன்லைனில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. 4 டிஜிட் தொகையில் தான்அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்படுகிறது. அதிலும் 1500 ப்ளஸ் தொகையில் பெரும்பாலானா பேருந்துகளின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரும்பாலானோர் ஊர் திரும்பும் ஞாயிறு அன்று கடுமையான கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளனர். இதெல்லாம் அரசு உத்தரவின் கீழ் வருமா? இல்லை புகார் வந்தால் தான் நடவடிக்கை என அரசு மவனம் காக்கப்போகிறதா? கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்த நூதன கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து பொதுமக்களின் ‛பர்ஸ்’களை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்