ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன், ஐபேட் உள்ளிட்ட கருவிகளின் சைபர் பாதுகாப்பை அண்மைக்காலமாக மேம்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் அண்மையில் ஆப்பிள் கேட்ஜெட்களில் ஆபாசப்படங்கள் சேகரிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது அந்த நிறுவனம். இதன்படி கூகுளின் ஜி-டிரைவ் போலச் செயல்படும் ஆப்பிளின் ஐ-க்ளவுட் டேட்டா சேகரிப்பில் ஆபாசப்படங்கள் குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த ஆபாசப்படங்கள் இருந்தால் அதைக் கண்டறிந்து அந்த நிறுவனமே தொடர்புடைய அதிகாரிக்கு புகார் அனுப்பிவிடும். இதற்காக ஆப்பிள் நிறுவனம் நமது ஐபோன் அல்லது ஐபேட்டின் புகைப்படங்கள் சேகரிக்கும் பகுதியைத் தொடர்ந்து கண்காணிக்கும்.
குழந்தைகள் மீதான பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அண்மைய அப்டேட்களில் இது இடம்பெற்றுள்ளது.மேலும் இதுபோன்ற ஆபாச புகைப்படங்களை சிரி வழியாக பயனாளர்கள் தேடும்போது அதைத் தடுக்கவும் ஆப்பிள் நிறுவனம் அப்டேட் செய்யவுள்ளது. குழந்தைகள் குறித்த ஆபாசப் படங்கள் இருக்கும் நிலையில் உடனடியாக அதனை காணாமல் போன சிறார்கள் மீட்புக்கான தேசிய நிறுவனத்துக்குப் புகார் அளிக்கும்.
முன்னதாக, ஐபோன் மற்றும் ஐபேட் வைத்திருக்கும் பயனாளர்கள் தங்களது சாதனங்களின் இயங்குதளத்தை புதுப்பிக்க வேண்டும் என CERT -in (CERT-Indian Computer Emergency Response Team) இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுஅவசரகால உத்தரவை பிறப்பித்துள்ளது. ஐபோன் மற்றும் ஐபேடின் முந்தைய புதிப்பிப்புகளில் உள்ள சில பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்த அறிவிப்பு வெளியானதாக தெரிகிறது . அரசுக்கு சொந்தமான CERT -in குழு, ஐபோன் மற்றும் ஐபேடின் முந்த அப்டேட்டில் நினைவக திறன் பாதிப்பு அதாவது memory corruption vulnerability என்ற ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளது. இதன் மூலம் ரிமோட் அட்டாக்கர்ஸ் ஐபோன் மற்றும் ஐபேடின் நினைவகத்திற்குள் நுழைந்து தகவல் திருட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாக CERT -in தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரத்தை உணர்ந்த ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளர்களுக்கான புதிய அப்டேட்டை இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. அதன் படி தற்போது அறிமுகமாகியுள்ள iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 ஆகிவற்றை பயனாளர்கள் உடனடியாக புதிப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிழைத்திருந்தங்களுடன் அறிமுகமாகியுள்ள இந்த புதிய அப்டேட்டானது நினைவக திறன் பாதிப்பிலிருந்து
(memory corruption vulnerability) முழுமையான பாதுகாப்பை வழங்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு அனைத்து ஐபோன் பயனாளர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபோன் 6 மற்றும் அதற்கு பிறகான மொபைல் போன்கள் , ஐந்தாம் தலைமுறை மற்றும் அதற்கு பிறகு வெளியான சாதனங்கள், ஐபாட் புரோ மாடல்கள், ஐபாட் ஏர் 2 , ஐபோன் மினி , ஐபேட் டை ( 7வது தலைமுறை ) , மேக் பிக் சர் ( macOS Big Sur)போன்றவை நினைவக திறன் பாதிப்பு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது