41ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்த ஒலிம்பிக் தொடரில்தான் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. அரையிறுதியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடியது.  இந்த போட்டியில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால், வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி பிரிட்டன் அணியை எதிர்த்து இன்று விளையாடியது. 


இந்த போட்டியில், தொடக்கத்தில் கோல் அடித்து பிரிட்டன் அணி முன்னிலை பெற்றது. ஆனால், இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் குர்ஜித் கவுர், 25 மற்றும் 26 நிமிடத்தில் அடுத்தடுத்து கோல்கள் அடித்து போட்டியை சமன் செய்தார். அதனை தொடர்ந்து, முன்னிலை பெற வேண்டும் என இரு அணிகள் கோல் அடிக்க முயற்சித்தபோது, வந்தனாவின் டைமிங் மூவ், இந்திய அணிக்கு இன்னொரு கோல் தந்தது. இதனால், போட்டியின் முதல் பாதி முடியும்போது, 3-2 என இந்திய அணி முன்னிலை பெற்றது. 






இந்த சீசனில், முக்கியமான போட்டிகள் கோல் அடித்து இந்திய அணியின் பதக்க கனவை தக்க வைத்தவர் குர்ஜித் கவுர். இன்றைய போட்டியிலும், அவர் முதல் பாதியில் அடித்த இரண்டு கோல்கள் அணிக்கு சாதகமாக அமைந்தது. ஆனால், ரியோ ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற பிரிட்டன் அணி, இம்முறை வெண்கலப் பதக்கத்தையாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் போட்டி முழுவதும் டஃப் கொடுத்தது. 






முதல் பாதியில் முன்னிலை பெற்றிருந்தது இந்திய அணி. ஆனால், இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களில் பிரிட்டன் அணி கேப்டன் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இதனால், இந்த போட்டியிலும் கடைசி கால்பாதி மிகவும் முக்கியமாக இருந்தது. பதக்கத்தை வெல்லப்போவது யார் என்பதை முடிவு செய்யும் கடைசி 15 நிமிடங்களாக இருந்தது. இரண்டாம் பாதியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில், இன்னொரு கோல் அடித்த பிரிட்டன் 4-3 என கோல் அடித்து முன்னிலை பெற்றது. 


போட்டி முடிவில், 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணி வென்றது. இதனால், இந்தியாவுக்கு வென்கலப் பதக்கம் கிடைக்கும் பறிபோனது. கடைசி வரை போராடிய இந்திய அணி, நான்காவது இடத்தில் நிறைவு செய்தது.