ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனம் அமேசான். இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில், பொருட்களை வாங்க விரும்புபவர்களின் நம்பர் ஒன் சாய்ஸ் இதுதான். அமேசான் போன்ற இணையழி வர்த்தக நிறுவனங்களாக அதில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் முதலீட்டை அடிப்படையாக கொண்டு செயல்படக்கூடியது.



இந்த தளங்களில் பொருட்களை வாங்கவிரும்பும் வாடிக்கையாளர்கள் அதிக ரேட்டிங் மற்றும் பொருட்கள் மீதான நல்ல கருத்துகள் இருக்கிறதா என்பதை அடிப்படையாக வைத்துத்தான் அதன் மீது தங்கள் ஆர்வத்தினை செலுத்துவர். எனவேதான் அமேசான்  விற்பனையாளர்கள் பலர் ரேட்டிங் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.  சைனாவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த அதிர்ச்சி சம்பவம்  அம்பலமாகியுள்ளது. கிட்டத்தட்ட  2 லட்சம்  வாடிக்கையாளர்கள் போலி ரேட்டிங் அடிப்படையில் பொருட்களை வாங்கி, ஏமாந்திருப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.



எப்படி செயல்படுகிறது இந்த போலி ரேட்டிங் விற்பனை?

முதலில் அமேசானில் பொருளை விற்கும் நபர், அதிக ரேட்டிங் வேண்டிய பொருள் குறித்த விவரங்களை குறிப்பிட்ட நபர்களுக்கு  வழங்குகிறார். அவர்கள்தான்  போலி ரிவியூவர்ஸ். பொருட்களின் விவரங்களை பெற்றுக்கொண்ட அவர்கள், தங்கள் அமேசான் கணக்குகளில் இருந்து அந்த பொருளை ஆர்டர் செய்கின்றனர்.

ஆர்டர் செய்த பொருள் வந்தவுடன், அதனை பணம் கொடுத்து பெற்றுக்கொள்கின்றனர். பின்னர் அமேசான் வலைதளத்திற்கு சென்று தாங்கள் வாங்கிய பொருட்களுக்கு கீழே , பெற்றுக்கொண்ட பொருளின் புகைப்படங்களை பதிவேற்றி, அதற்கான அதிகபட்ச ரேட்டிங் மதிப்பான, ஐந்து புள்ளிகளை வழங்குகின்றனர். பிறகு பொருள் பற்றிய சிறப்பான கருத்துகளை பதிவிட்டு அந்த லிங்க் மற்றும் தங்களின் வங்கிக்கணக்கு விவரங்களை விற்பனையாளருக்கு அனுப்பி வைக்கின்றனர்.




அவர் அந்த விப‌ரங்களை சரிபார்த்தவுடன்  பொருளுக்கான தொகையை ரீஃபண்ட் செய்து விடுகிறார்.  சில சமயங்களில் பொருட்களுக்கு கொடுக்கும் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஃரீபண்ட் தொகை அதிகரிக்கிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலானது நம்மில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட 7ஜிபி அளவிலான‌ 13 மில்லியன் போலி ரேட்டிங் கணக்குகள் அமேசானில்  பதிவாகியிருப்பதுதான் கூடுதல் அதிர்ச்சியான செய்தி. இதில் 75 ஆயிரம் பேரின் வங்கிக்கணக்குகள் மற்றும் அவர்களின் பெயர்களை அந்ந பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளனர். போலி ரேட்டிங் வழங்குவதை தடுக்க அமேசான் நிறுவனம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு மற்றும் இரண்டாம் அலை தாக்கத்தால் நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளன. இன்று முதல் தமிழகத்திலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்,  அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தகங்கள் தங்களின் சேவையை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.