இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
பயோ-பபிள் நடைமுறைக்கு உட்பட்டு 2021 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுவந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த ஆண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் சீசன், தேதி அறிவிக்கப்படாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பான முறையில் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், பாதுகாப்பாக வீடு திரும்பிய கோலி, மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து கொரோனா நிவாரண நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக, 2 கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்கியுள்ளனர்.
ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அடுத்து இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் விவரத்தை பிசிசிஐ வெளியிட்டது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். கே.எல் ராகுல், சஹா ஆகியோர் (உடற்தகுதி நிரூபணம் செய்ய வேண்டும்)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரையும் கருத்தில், கொண்டு, இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.