மெட்டா நிறுவனம் இன்று முதல் ஃபேஸ்புக் ரீல்ஸ் சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் படு ஹிட்டான இந்த ரீல்ஸ் சேவை இன்று முதல் பேஸ்புக் செயலியிலும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 150 நாடுகளில் இந்த பேஸ்புக் ரீல்ஸ் சேவை அறிமுகமாகி உள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், "ரீல்ஸ் வகை வீடியோக்கள் இன்று உலகம் முழுவதும் பெரும் வளர்ச்சியுடன் அனைவரும் பயன்படுத்தும் விஷயமாகி உள்ளது. அதனால் இன்று முதல் ரீல்ஸ் சேவை பேஸ்புக்கிலும் கிடைக்கும்" என கூறினார். மெட்டா நிறுவனம் ஆனது ரீல்ஸ் வீடியோவை உருவாக்குபவர்களுக்காக புதிய எடிட்டிங் சேவையையும் இத்துடன் வழங்குகிறது. இதில் ரீமிக்ஸ், டிராஃப்ட், வீடியோ கிளிப்பிங் உள்ளிட்ட எக்ஸ்ட்ரா அம்சங்கள் இடம்பெறுகிறது.






இதுகுறித்து பேஸ்புக் தரப்பில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், "தற்போது ஃபேஸ்புக்கில் 60 நொடிகளுக்கு ரீல் வீடியோக்களை உருவாக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த ரீமிக்ஸ் அம்சத்தின் மூலம் பயனர்கள் புதிய ரீல்ஸ் வீடியோக்களையும் உருவாக்கலாம், அதே நேரத்தில், ஏற்கனவே பகிரப்பட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் எடிட் செய்து கொள்ளலாம். டிராப்ட் எனும் அம்சத்தில் ரீல் வீடியோக்களை பயனர்கள் சேகரித்து வைக்கலாம். வீடியோ கிளிப்பிங் எனும் அம்சத்தின் மூலம் 1 நிமிடத்திற்கும் மேல் நீளமான வீடியோக்களை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளது. பேஸ்புக்கில் ஸ்டோரிஸ், வாட்ச், நியூஸ் ஃபீட் ஆகிய இடங்களில் ரீல்ஸ் சேவைகள் காண கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.





இது தவிர மெட்டா நிறுவனம், ஃபேஸ்புக் ரீல் வீடியோ உருவாக்குபவர்களுக்கு மானிடைசேஷன் அம்சத்தையும் வழங்கியுள்ளது. இதன்மூலம் ரீல்ஸ் வீடியோ உருவாக்குபவர்கள் அதிக பார்வைகள் வருவதன் மூலம் வருமானமும் பெறலாம். தகுதியான நாடுகளில் இருந்து வரும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு சிறப்பு தொகை வழங்குவதற்காக ரூ.26 லட்சம் தொகை தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரீல்ஸ் மூலம் பல்வேறு வகையில் விளம்பரம் செய்யும் செயல்பாட்டையும் பேஸ்புக் சோதனை செய்து வருகிறது. இந்த ரீல்ஸ் சேவையை ஃபேஸ்புக் அறிமுகம் செய்வதற்கு காரணம் அதன் தினசரி பயனர்கள் சமீபத்தில் குறைந்ததே என செய்திகள் வருகின்றன.


பேஸ்புக்கிற்கு கடும் போட்டியாக டிக்டாக் நிறுவனம் இருந்து வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் டிக்டாக் அதீத வளர்ச்சியை சந்தித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயனர்கள் டிக்டாக்கில் இணைந்து வருகின்றனர்.


இதனால் டிக்டாக் போலவே உள்ள ரீல்ஸ் சேவையை பேஸ்புக்கிலும் அறிமுகம் செய்வதற்கான சூழ்நிலைக்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தான் இழந்த பயனர்களை மீண்டும் பெறலாம் என பேஸ்புக் நம்பி இந்த செயல்பாடுகளை செய்து வருகிறது.