கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கோவை மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதுபோலவே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் திமுக வென்று இருந்தது. இந்த நிலையில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 



கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாதநிலையில், கோவை மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜியும், சேலம் மாவட்டத்திற்கு கே.என்.நேருவையும் பொறுப்பாளர்களாக நியமித்தது திமுக தலைமை, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சேலம் மாவட்டம் என்பது திமுகவின் கோட்டையாக இருந்து வந்த நிலையில் 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு  சேலம் மாவட்டம் அதிமுக வசம் சென்றது. திமுகவின் சேலம் மாவட்ட முகமாக இருந்த வீரபாண்டி அறுமுகம் மறைவுக்கு பிறகு சேலம் மாவட்ட திமுக கோஷ்டிகளால் பிளவு பட்ட நிலையில், சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக அமைச்சர் நேரு நியமிக்கப்பட்டதற்கு பின் நடந்த முதல் கூட்டத்தில் "சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை உடைத்து, திமுக கோட்டையாக மாற்றுவோம். நான் வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை, உங்களுக்குத் தெரிந்த அத்தனை வேலைகளும் எங்களுக்கும் தெரியும்" என்று தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். 


 



மேலும், சேலம் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்கள், 6 நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகளில் தனித்தனியாக நிர்வாகிகளை சந்தித்த கே.என்.நேரு, அவர்களிடம் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார். வாரம் ஒரு முறை சேலம் மாவட்டம் வருகை தரும் நேரு சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரடியாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். 



பின்னர், நான்கு நாட்கள் சேலத்தில் முகாமிட்டிருந்த அமைச்சர் கே.என்.நேரு, சேலத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்களது குறைகளை அரசிடம் தெரிவிப்பதற்காக மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தினார். பதில் 4 நாட்களில் 40 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு அதற்கு ஒரு வாரத்தில் 22,000 மனுக்களில் இருந்த மக்களின் குறையை நிவர்த்தி செய்தார். சேலம் மாவட்டத்தில் அரசு சார்பில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தினார். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் தற்போது வெற்றி பெற்றபின் அறிவிக்கப்படும் மேயர் வரை அனைத்தையும் தனது அனுபவத்தின் மூலம் அமைச்சர் கே.என்.நேரு வகுத்துக் கொடுத்த கணக்குதான் சேலம் மாவட்டத்தில் திமுக மாபெரும் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது.