சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் புவியின் சுற்று வட்டப்பாதையில், குறைந்தபட்சமாக  296 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.


இஸ்ரோ போட்ட டிவீட்:


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 3வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது, மொரீஷியஸ், பெங்களூரு. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம் மற்றும் போர்ட் பிளேயரில் உள்ள ISTRAC/ISROவின் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களில் இருந்து செயற்கைக்கோள் கண்காணிக்கப்பட்டது. வெற்றிகரமான நடவடிக்கையை தொடர்ந்து செயற்கைகோளானது புவியிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 296 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 71 ஆயிரத்து 767 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. தொடர்ந்து,  செயற்கைக்கோளை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு நகர்த்தும் நிகழ்வு, வரும் 15ம் தேதி அதிகாலை  02:00 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.






 


ஆதித்யா எல்1 விண்கலம்:


நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதை தொடர்ந்து, சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம். அதன்படி, கடந்த 2ம் தேதி காலை 11.50 மணிக்கு, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துக் கொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.


வெற்றிகரமான பயணம்:


சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து லெக்ராஞ்சியன் 1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, இந்த செயற்கைக்கோள் சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும். லெக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தபிறகு கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் மேற்கொள்ளும்.  அதன்படி,  இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக முதல் 16 நாட்களுக்கு செயற்கைக்கோள் புவியை சுற்றி வந்து குறைந்தபட்ச சுற்றுவட்டப்பாதையை எட்டும். அங்கிருந்து சூரியனை நோக்கி உந்தி தள்ளபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 3ம் தேதி முதல் சுற்றுவட்டப்பாதைக்கும், பின்பு செப்டம்,பர் 5ம் தேதி இரண்டாவது சுற்றுவட்டப்பாதைக்கும் செயற்கைக்கோள் உயர்த்தப்பட்டது. அந்த வரிசையில் தான் தற்போது 3வது சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.