டிஜிட்டல் உலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல 5G தொழில்நுட்பத்தின் பங்கு அதிமாக இருக்கும். ஏனென்றால் இது வெறும் ஒரு தொலைதொடர்பு சார்ந்த தொழில்நுட்பம் மட்டுமல்ல. அதையும் தாண்டி இதில் வேறு சில சிறப்புகளும் உள்ளன. மேலும் இந்த தொழில்நுட்பம் 4G-ஐ விட மிகவும் பயன் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி இந்தியாவில் 5G தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோஃபோன் உள்ளிட்ட சில தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்கான ஆயத்த பணிகளில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அமல்படுத்துவது குறித்து பிரபல நடிகை ஜூஹி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரும் ஜூன் 2-ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜூஹி சாவ்லாவின் செய்தித் தொடர்பாளர், "5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அமல்படுத்தப்படுவது தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளோம். ஏனென்றால் 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஆதரவாக உள்ளவர்கள் இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். எனவே அது தொடர்பாக அவர்கள் நடத்திய ஆய்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளோம்.
அத்துடன் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி அமல்படுத்தப்பட வேண்டும் என்ற அவசரத்தில் தான் உள்ளனர். அவர்கள் மக்களுக்கும் விலங்குகளுக்கும் ரேடியோ அலைக்கற்றை கதிர்வீச்சு பாதிப்பு குறித்து கவலைப்படவில்லை. எனவே தான் நாங்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வழக்கு தொடர்ந்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை ஜூஹி சாவ்லா சார்பில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "எந்த மனிதரும், விலங்கும்,பறவையும் 24 மணிநேரமும் கதிர்வீச்சிலிருந்து தப்ப முடியாது. ஏனென்றால் தற்போதைய உலகத்தில் கதிர்வீச்சின் அலவு 10-இல் இருந்து 100 மடங்கு அதிகரித்துள்ளது. அந்தவகையில் 5 ஜி தொழில்நுட்பத்தின் மூலம் வரும் அதிகமாக கதிர்வீச்சு மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக நாங்கள் நடத்திய ஒரு சில ஆய்வுகளிலும் அப்படியான முடிவுகளே வந்துள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 2019-ஆம் ஆண்டு ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்ட கேள்வி மற்றும் அதற்கான பதிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 2ஜி,3ஜி,4ஜி,5ஜி தொழில்நுட்பங்கள் மூலமாக வரும் கதிர்வீச்சு பாதிப்பு தொடர்பாக இந்தியாவில் எந்தவித ஆய்வும் நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் தான் இதனை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ஜூஹி சாவ்லா எப்போதும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிரானவர் அல்ல. ஆனால் அந்த தொழில்நுட்பம் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களை பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
5G Vs 4G என்ன வித்தியாசம்? 5G மொபைல் நெட்வொர்க்கில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?