இந்தியாவில் நிலவும் கொரோனா தொடர்பான பிரச்னைகள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குகளை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த 30 ஏப்ரல் அன்று மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கைகள், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் மருந்து விநியோகம் குறித்த வழக்கு ஒன்றை விசாரித்தது. அதன் நீட்சியாக மாநிலங்களுக்கான தடுப்பூசிகள் விநியோகம் குறித்து நீதிபதி சந்திரசூட், நாகேஸ்வரராவ் மற்றும் ரவீந்திர பட் தலைமையிலான மூவர் அமர்வு இன்று விசாரித்தது.
வழக்கு விசாரணையில் ’அரசியலமைப்பின் பிரிவு 1ன் படி, இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒன்று. அரசியலமைப்பு அவ்வாறு கூறுவதால் கூட்டாட்சியை நாம் பின்பற்ற வேண்டும். மத்திய அரசே தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்’ என நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் போன்ற மாநிலங்கள் தங்களது தடுப்பூசி தேவைகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு சர்வதேச டெண்டர் கோரி வருவதை அடுத்து நீதிமன்றத்தில் இந்த விவாதம் எழுந்தது.
மேலும், “18-44 வயதுடையவர்களில் 50 சதவிகிதம் பேரால் கூட தடுப்பூசியை விலைகொடுத்து வாங்கமுடியுமா என்பது சந்தேகமே. இந்த பாகுபாட்டைக் களைய தடுப்பூசி வாங்குதல் மற்றும் விற்பனை தொடர்பான ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்குவது அவசியமாகிறது. 2021-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் அத்தனை பேருக்கும் தடுப்பூசி கிடைக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்றும் அவர் கூறினார்.
மாநிலங்களுக்கான தடுப்பூசிக் கொள்முதலின் நிலை என்ன?
புதிய தடுப்பூசிக் கொள்கையின்படி மாநிலங்களே தமக்குத் தேவையான தடுப்பூசிகளை நிறுவனங்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி பஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்கள் ஃபைசர் , மாடர்னா போன்ற நிறுவனங்களை நேரடியாகத் தடுப்பூசிக் கொள்முதலுக்காக அணுகின.ஆனால் அந்த நிறுவனங்கள் தடுப்பூசிகளைத் தர மறுத்துவிட்டன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒன்றிய அரசிடமிருந்து பெறப்பட்ட 95.59 லட்சம் தடுப்பூசி டோஸ்களில் இதுவரை 84.5 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள டோஸ்களில் 6 லட்சம் தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 3 லட்சம் டோஸ்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்பட இருக்கின்றன. இதுதவிர சர்வதேச டெண்டர்கள் வழியாக 3.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கும் அரசு திட்டமிட்டு வருகிறது. குறைந்த விலையில் தடுப்பூசி தயாரிப்பவர்களுக்கு டெண்டர் விடப்பட்டு ஆறுமாத காலத்துக்குள் தமிழ்நாட்டுக்கான தடுப்பூசி கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படும். இதுதவிர 85 கோடி ரூபாய் செலவீட்டில் சுமார் 23.5 லட்சம் தடுப்பூசி டோஸ்களை மாநிலத்திலேயே கொள்முதல் செய்வதற்குமான பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கருப்பு பூஞ்சைக்கு மாத்திரை கண்டுபிடித்தது ஐஐடி!