இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் 5ஜி தொழில்நுட்பம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் தொலை தொடர்புத்துறை  மற்றும் தொலைதொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோஃபோன் ஆகியவை சில நகரங்களில் 5ஜி சோதனையை தொடங்கியுள்ளன. 


 


இந்நிலையில் வரும் 2022ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள  மெட்ரோ நகரங்கள் மற்றும் சில நகரங்களில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை,மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் அடுத்த ஆண்டு உறுதியாக 5ஜி சேவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சண்டிகர், ஹைதரபாத், லக்னோ, புனே,காந்திநகர், குருகிராம், ஜாம்நகர் உள்ளிட்ட இடங்களிலும் அடுத்த ஆண்டு 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



5ஜி தொழில்நுட்பம் தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத்துறை சார்பில் ஒரு பரிசோதனை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘Indigenous 5G Test bed’ என்ற பெயரில் 2018ஆம் ஆண்டு முதல் ஒரு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஐஐடி டெல்லி, சென்னை, கான்பூர் உள்ளிட்ட நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான பரிசோதனையில் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிறுவனங்களுடன் சேர்த்து சில ஆராய்ச்சி அமைப்புகளும் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சுமார் 224 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இது வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆகவே அடுத்த ஆண்டு இந்தியாவில் நிச்சயம் 5ஜி சேவை வாடிக்கையாளர்களுக்கு வரும் என்று கருதப்படுகிறது. 


 


5ஜி என்றால் என்ன?


5ஜி தொழில்நுட்பம் மில்லிமீட்டர் அலை ஸ்பெக்ட்ரமில் (30-300 கிகா ஹெர்ட்ஸ்) என்ற அதிவேக அதிர்வெண் பயன்படுத்தி இயங்கும். இதனால் இதில் பெரியளவில் தரவுகள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும். அத்துடன் இதன் வேகமும் 1-20 ஜிபி வரை செல்லும். இதன் காரணமாக பல தேவைக்கு இதை எளிதில் பயன்படுத்த முடியும். 


5ஜி vs 4ஜி:


2000ஆம் ஆண்டு 3G தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகு அதைவிட அதிவேகமாக 4G தொழில்நுட்பம் வந்தது. தற்போது அதற்கு அடுத்தப்படியாக மின்னல் வேக தொழில்நுட்பமாக 5G தொழில்நுட்பம் வந்துள்ளது. இந்த இரண்டிற்கும் ஒரு சில முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன. 



  • அதிர்வெண்(frequency):


   5ஜி- 30-300 கிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்


  4ஜி-  2-8 கிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்


இந்த மில்லிமீட்டர் அதிர்வெண் பயன்படுத்துவதால் 5G தொழில்நுட்பம் 4G-ஐ விட 10 மடங்கு அதிக அலைவரிசை கொண்டிருக்கும். இதனால் இதன் வேகமும் அதிகரிக்கும். 






  • சேவை அளிக்கும் சாதனங்கள்:


 4Gயிடம் அதிகம் நிறைந்த பகுதிகளில் 4ஜி சேவையை பயன்படுத்தும் போது அதன் வேகம் குறையும். ஆனால் 5ஜி தொழில்நுட்பம் இதற்கு மாறாக ஒரே சமயத்தில் ஒரு சதுர கிலோமீட்டரில் 1 மில்லியன் சாதனங்கள் வரை சேவை அளிக்கும் திறன் கொண்டது. ஆகவே கூட்டம் மிகுந்த பகுதிகளிலும் 5G தொழில்நுட்பத்தை தங்குதடையின்றி பயன்படுத்தலாம்.


5ஜி பயன்பாடுகள்:


5G தொழில்நுட்பம் தொலைத் தொடர்புக்கு மட்டுமானது அல்ல. இதை வைத்து 'இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்' என்ற மற்ற சாதனங்களை இணையதளம் மூலம் கட்டுப்படுத்தும் முறையும் எளிதாக செய்ய முடியும். அத்துடன் வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கும் இது உதவும். எடிஜ் கம்பியூட்டிங் உள்ளிட்ட பயன்பாடுகளும் இதன் மூலம் எளிதில் செய்ய முடியும். மேலும் 5ஜி யில் இருக்கும் நெட்வோர்க் ஸ்ப்லைசிங் (Network Splicing) மூலம் ஒரே நெட்வோர்க்கை பிரித்து பல நெட்வோர்க் ஆக பயன்படுத்த முடியும். இதன்மூலம் டேடிகேட்டட் லையன் வசதியை எளிதில் பெற முடியும். அத்துடன் பாதுகாப்பு ஒரு குறிப்பிட்ட தரவுகளை அனுப்ப இந்த முறையை பயன்படுத்தலாம். 


மேலும் படிக்க: ஜோக்கர் வைரஸ் எச்சரிக்கை! இந்த ஆப் உங்க போன்ல இருக்கா? உடனே தூக்கிடுங்க.!