உலகம் முழுவதும் உள்ள சுமார் 49 கோடி பேரின் தொலைபேசி எண்கள் வாட்சப்பிலிருந்து திருடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பல கோடி பேரால் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷனாக வாட்சப் இருந்துவருகிறது. செல்போனில் உள்ள தொலைபேசி எண்களின் மூலமாக செயல்படும் ஆப் என்பதால் பல கோடி தொலை பேசி எண்களை கையாளும் இடத்தில் இருந்தது வாட்சப். ஆனால், வாட்சப் நிறுவனத்திடமிருந்து சுமார் 49 கோடி தொலை பேசி எண்களை பிரபல ஹேக்கிங் குழுவானது திருடி அதை விற்பனைக்கு வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல வலைதளமான சைபர் நியூஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி, 84 நாடுகளில் இருந்து தொலைபேசி எண்களை திருடியுள்ளதாக கூறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள 32 கோடி பயனாளர்கள், இங்கிலாந்தில் இருந்து 11 கோடி பயனாளர்கள் மற்றும் ரஷ்யாவில் இருந்து 10 கோடி பயனாளர்களிடமிருந்து தொலைபேசி எண்களை திருடியுள்ளனர்.
அதேபோல் எகிப்து நாட்டிலிருந்து 4.5 கோடி பேரின் எண்கள், இத்தாலியைச் சேர்ந்த 3.5 கோடி பேர், சவுதி அரேபியாவைச் சேர்ந்த 2.9 கோடி பேர், ஃப்ரான்ஸை மற்றும் துருக்கியைச் சேர்ந்த 4 கோடி பேரின் தொலைபேசி எண்கள் தங்ஙளிடம் உள்ளதாக அந்த ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். அந்த தொலைபேசி எண்களை அமெரிக்கர்களுக்கு 7000 டாலர்களுக்கும், இங்கிலாந்து நாட்டினருக்கு 2500 டாலர்களுக்கும், ஜெர்மனி நாட்டினருக்கு 2000 டாலர்களுக்கும் விலை நிர்ணயித்துள்ளனர். சைபர்நியூஸ் ஆராய்ச்சியாளர்கள் தொலைபேசி எண்களை திருடிய ஹேக்கர்களிடமிருந்து சாம்பிளுக்கு காண்டாக்ட்களை கேட்டபோது, அவர்கள் சாம்பிளுக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த 1097 பேரின் தொலைபேசி எண்கள் மற்றும் 817 அமெரிக்கர்களின் தொலைபேசி எண்களையும் அனுப்பியுள்ளனர். அந்த எண்களை சோதனை செய்ததில் அத்தனை எண்களும் வாட்சப்பில் ஆக்டிவாக இருப்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.
எனினும், இந்த எண்களை எப்படி திருடினார்கள் என்பதை ஹேக்கர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டார்கள் என்றும், இந்த எண்களைக் கொண்டு ஸ்பாம் செய்வது, மோசடி முயற்சி, அடையாளத் திருட்டு மற்றும் மற்ற சைபர் கிரைம் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதில் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் இந்தியாவில் உள்ள 61.6 லட்சம் பேரின் தொலைபேசி எண்களையும் திருடியுள்ளனர்.