மத்தியப் பிரதேசம், குவாலியரைச் சேர்ந்தவர் பெண் ஒருவர் முன்னதாக காவல் துறையினரை தொடர்புகொண்டு தன் வீட்டுக்கு திருட வந்த நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அத்துடன் தன்னிடமிருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து பெண்ணின் வீட்டுக்கு விரைந்த காவல் துறையினர், தொடர்ந்து அவரிடம் இரண்டு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளனர்.


இந்நிலையில் முதலில் சுமார் 20 நபர்கள் வீட்டுக்கு கொள்ளையடிக்க வந்ததாகக் கூறிய அப்பெண், தொடர்ந்து 12 பேர், 10 பேர் என முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அப்பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், பெண் பொய் புகார் அளித்தது தெரிய வந்தது. இந்நிலையில் காவல் துறையினரிடம் பொய் புகார் அளித்ததை ஒப்புக்கொண்ட அப்பெண், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.


அதன்படி, தனது மாமனார், மாமியார் தன்னிடம் நகை கேட்டு தொடர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதால் தான் நகைகள் திருடுபோனதாகவும் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் பொய் புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவல் துறையினர் பெண்ணின் மாமனார், மாமியாரிடம் இதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மற்றொரு சம்பவம்


முன்னதாக வரதட்சணை கொடுக்கத் தவறிய மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கணவன் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கான்பூரின் சக்கேரி என்னும் ஊரில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. பல நாட்களாவவே கொடுக்கிறேன் என்று கூறிய வரதட்சணையை கொடுக்காமல் இருப்பதால் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதனை எதிர்த்து கேட்கமுடியாமல் இருத்து வந்த அவரை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு செல்வராம்.


இந்த நிலையில், ஒரு நாள் நண்பர்களோடு வந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளிக்கப் பட்டுள்ளது. பெண்ணின் குடும்பத்தினர் கடந்த புதன்கிழமை சக்கேரி காவல் நிலையத்தில் அவரது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளனர். தனக்கு மார்ச் 6, 2020 அன்று திருமணம் நடந்ததாகவும், அதன்பிறகு, தனது கணவரும், மைத்துனரும் வரதட்சணையாக ரூ.2 லட்சமும், காரும் கேட்டதாகவும் அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.


அவர்கள் கேட்டதுபோல வரதட்சணை கோரிக்கைகளை நிறைவேறாததால் அந்தப் பெண்ணை ஒரு அறையில் வைத்து அடைந்துள்ளார் அவரது கணவர். அதுமட்டுமின்றி, ஒரு நாள் தனது கணவர் தனது நண்பர்கள் மூன்று பேரை அழைத்து வந்ததாகவும், அவர்கள் நால்வரும் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் கூறினார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி கேட்டபோது, ​​தனது கணவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் உதவி ஆணையர் (ஏசிபி) மிருகங்க் பதக் தகவல் தெரிவித்தார்.