உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் 2021 போட்டிகள் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் மற்றும் மணிகா பாட்ரா ஜோடி பங்கேற்றது. இவர்கள் இந்தப் பிரிவில் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக காலிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7ஆவது இடத்தில் இருந்த ஜோடியை வீழ்த்தி அசத்தினர். அதன்பின்னர் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பெலாரஷ்யாவை சேர்ந்த ஜோடியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 


இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நடோர் மற்றும் டோரா ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கேமை இந்திய ஜோடி 11-9 என்ற கணக்கில் எளிதில் வென்றது. அதன்பின்னர் இரண்டாவது கேமை ஹங்கேரி ஜோடி 11-9 என வென்றது. இதைத் தொடர்ந்து சுதாரித்து கொண்டு விளையாடிய இந்திய ஜோடி அடுத்த இரண்டு கேமைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை வென்றது. இறுதியில் 11-9,9-11,12-10,11-6 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதன்மூலம் உலக தரவரிசையில் 94ஆவது இடத்தில் இருக்கும் ஹங்கேரி ஜோடியை தோற்கடித்து சத்யன் ஞானசேகரன் மற்றும் மணிகா பாட்ரா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 




முன்னதாக இன்று காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதில் இந்தியாவின் மனிகா பாட்ரா ரஷ்ய வீராங்கனை எலிசபெத் அப்ராமியானை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் 12-10, 11-9, 12-10, 11-8 என்ற நேர் கேம் கணக்கில் 18 வயது ரஷ்ய வீராங்கனை மணிகா பாட்ராவை தோற்கடித்தார். இதனால் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை மனிகா இழந்தார். 






டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத் கமல்-மனிகா பாட்ரா ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறது. அதன்பின்னர் அவர் சத்யன் உடன் இணைந்து மீண்டும் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்க போவதாக கூறினார். இந்தச் சூழலில் அவர்கள் பங்கேற்ற முதல் தொடரிலேயே சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளனர். இதற்கு முன்பாக சத்யன் ஞானசேகரன் மற்றும் மனிகா பாட்ரா ஜோடி 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ”குறையெல்லாம் நிறையாய் மாற்றி..” : பாராலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் 19வயது வீராங்கனை