தமிழக மின்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் செந்தில் பாலாஜி. இவர், இன்று வடசென்னையில் உள்ள எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


”வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2013-14-ஆம் ஆண்டிற்கு பிறகு, தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நிலக்கரியை பொறுத்தவரை பதிவேட்டில் உள்ள இருப்பிற்கும், இருப்பிற்கும் வித்தியாசம் உள்ளது. இதற்காக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.


கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மூன்று பேர் கொண்ட அந்த குழு,  நிலக்கரி இருப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 31.3.2021 நிலவரப்படி, அதாவது முந்தைய ஆட்சியின்போது இருந்த இருப்புகளை சரிபார்த்தபோது 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் இருப்பதற்கும், இருப்பில் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இது மிகப்பெரிய முறைகேடு.




நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிர்வாக ரீதியாக அரசு நடவடிக்கை எடுக்கும். இந்தாண்டு மின்கட்டணத்தில் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை. குறைபாடுகள் உள்ள 8 ஆயிரத்து 900 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அனல்மின் நிலைய நிறுவுதிறனில் 2006-2011ல் மொத்த நிறுவுதிறனில் 85 சதவீதம் மின்சாரத்தை அனல்மின் நிலையங்கள் உற்பத்தி செய்தன. அது 75 சதவீதமாக குறைக்கப்பட்டு, தற்போது 2016-21 ஆட்சிக்காலத்தில் 58 சதவீதம் மட்டுமே மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியின் மோசமான நிர்வாகம், சரியான பராமரிப்பு இல்லாததே உற்பத்தி குறைய காரணம்.




இந்த உற்பத்தியை குறைப்பதற்கு காரணம் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதே கடந்த ஆட்சியில் இலக்காக இருந்தது. இதன் காரணமாகவே, கடந்த காலங்களில் மின்சார உற்பத்தி இந்தளவிற்கு குறைந்துள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.  வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் நிலக்கரியை காணவில்லை என்று மின்துறை அமைச்சரே தகவல் தெரிவித்திருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.