டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் வரும் 24-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் இந்தியாவில் இருந்து 54 வீரர் வீராங்கனைகள் 9 பிரிவு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் முதல் முறையாக பாராலிம்பிக் வரலாற்றில் பேட்மிண்டன் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலக் கோலி பங்கேற்க உள்ளார். பாராலிம்பிக் பேட்மிண்டனில் 3 பிரிவுகளில் விளையாடப்போகும் ஒரே இந்திய வீராங்கனை பாலக் கோலிதான்.

  


இந்நிலையில் அவர் கடந்த வந்த தடைகள் என்னென்ன? அவர் அதை எப்படி எதிர்கொண்டார்?


ஒவ்வொரு நாளும் காலையில் விடியும் போது நமக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கும். ஒன்று நம்முடைய கனவை தூக்கத்தில் கண்டுகொண்டு இருப்பது. மற்றொன்று தூக்கத்தில் கண்ட கனவை நினைவாக்க முயற்சி எடுப்பது. இதில் நாம் எதை தேர்வு செய்கிறோமோ அதில்தான் நம்முடைய வெற்றி இருக்கும். அந்த வகையில் பாலக் கோலி இரண்டாவது வாய்ப்பை தேர்வு செய்தவர். 


பஞ்சாப் பகுதியின் ஜலந்தரில் பிறந்தவர் பாலக் கோலி. இவருக்கு பிறக்கும் போதே இடது கையில் பிரச்னை இருந்தால் அது சரியாக வளரவில்லை. தன்னுடைய குறையை பார்த்து பலரும் பரிதாபப்படுவது அவருக்கு பிடிக்காமல் இருந்தது. இதனால் தன்னுடைய இயலாமையை தனது சிறப்பு திறனாக மாற்ற எண்ணினார். இதற்காக 2017ஆம் ஆண்டு தன்னுடைய 14-ஆவது வயதில் பாரா விளையாட்டுகளில் சேர முடிவு எடுத்தார். அவருக்கு ஏற்ற விளையாட்டு என்ன என்று தேடிய போது பேட்மிண்டன் விளையாட்டை அவர் தேர்வு செய்தார். 




அதன்பின்னர் இந்தியாவின் பாரா பேட்மிண்டன் பயிற்சியாளரான கௌரவு கண்ணாவை சந்தித்தார். அப்போது பலரும் இவரால் பாரா பேட்மிண்டனில் சாதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். அந்த சமயத்தில் பயிற்சியாளர் கௌரவ் கண்ணா பாலக் கோலிக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அதாவது, “உன்னுடைய பலம் மற்றும் பலவீனங்களை ஒரு காகிதத்தில் எழுதி பார்த்து. அதை வைத்து நீ உன்னுடைய முடிவு எடு” என்று கூறியுள்ளார். 


அந்த அறிவுரையை ஏற்று பாலக் கோலி தன்னுடைய பலம் மற்றும் பலவீனத்தை காகிதத்தில் எழுதியுள்ளார். அதில் அவருடைய பலவீனத்தைவிட பலமே அதிகமாக இருந்துள்ளது. ஆகவே தன் பலத்தை வைத்து வெற்றி பெற வேண்டும் என்று பேட்மிண்டனில் களமிறங்கினார். பயிற்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் தேசிய பாரா பேட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என மூன்று பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றார். 




அதன்பின்னர் உகாண்டாவில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். அத்துடன் உலக பாரா பேட்மிண்டன் தரவரிசையில் 12-வது இடத்தையும் பிடித்தார். இதனால் 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். மேலும் டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் இரட்டையர் பிரிவிலும் தகுதி பெற்றார். இதன்மூலம் பாராலிம்பிக் பேட்மிண்டனில் மிகவும் குறைந்த வயதில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தகுதி பெற்ற வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். 


2019-ஆம் ஆண்டில் அதற்கு பின்பு இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் பாராலிம்பிக் கனவிற்கு தடையாக இருக்குமோ என்று கருதப்பட்டது. எனினும் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் கொரோனா காரணமாக தள்ளிப்போனது அவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. காயத்தில் இருந்து தற்போது மீண்ட பாலக் கோலி இந்தாண்டு துபாயில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார். அதில் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம், இரட்டையர் பிரிவில் வெண்கலம் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் என மூன்று பதக்கங்கள் வென்று அசத்தினார். 






இதனால் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கியா பாராலிம்பிக் போட்டியில் இவர் ஒற்றையர் பிரிவிலும், மகளிர் இரட்டையர் பிரிவில் பாருள் பர்மார் உடன் விளையாடுகிறார். அத்துடன் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத் பகத் உடன் இணைந்து விளையாட உள்ளார். ஆகவே இவர் அங்கு பதக்க வேட்டையில் ஈடுபடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.