WTC2023 Final: உலகடெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை அதாவது ஜூன் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. 


கிரிக்கெட் உலகமே மிகவும் ஆவலாக காத்திருப்பது உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காகத்தான். இதுவரை ஒரு உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மட்டும் தான் நடைபெற்றுள்ளது. அந்த தொடரில் இறுதிப் போட்டி வரை வந்த இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் கோப்பையை இழந்தது. இந்நிலையில் இம்முறையும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இம்முறை இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடன் மோதவுள்ளது. 


இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வென்றால், முத்தரப்பு கிரிக்கெட்டிலும் உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமைக்கு சொந்தமாகும். 2019 - 2021 ஆம் ஆண்டு உலகடெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரினை நியூசிலாந்து அணி வென்றிருந்தாலும், அந்த அணி இதுவரை 50 ஓவர் மற்றும் டி20 உலகக்கோப்பைத் தொடரை வென்றதில்லை. 2015 மற்றும் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை வந்த நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திடம் கோப்பையை இழந்தது.


இந்நிலையில் 50ஓவர்கள் மற்றும் 20 ஓவர்கள் உலக்கோப்பையை வெல்லாத நியூசிலாந்து அணி சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தன் வசமாக்கி அசத்தியது. இது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு மட்டுமல்லாது நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் கோப்பையை வென்று முத்தரப்புப்  உலக்கோப்பை தொடரை வென்ற அணி என்ற பெருமையை இந்திய அணி படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி தோல்வியைத் தழுவி ஏமாற்றம் தந்தது. 


ஆனால் இம்முறை விடாமுயற்சியுடனும் மற்றும் ஒரு அணியாகவும் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு வந்து இந்திய அணி அஸ்திரேலிய அணியை வீழ்த்தி கோப்பையை தட்டித்தூக்கி முத்தரப்பு கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றால் ஆஸ்திரேலிய அணி அந்த பெருமையை தட்டிச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா மற்றூம் இந்திய அணிகள் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


எனவே இந்த போட்டியில் வெல்லும் அணி போட்டியோடு தொடரையும் தொடருடன் தனி பெருமையையும் தன்வசமாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை அதாவது ஜூன் 7ஆம் தேதி இந்திய நேரப்படி 3.30 மணிக்கு லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் மோதவுள்ளது.