கடந்த வெள்ளிக்கிழமை, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. 278 பேரின் உயிரை பலி வாங்கிய இந்த விபத்தின் விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாலசோரில் விபத்து நடந்த பகுதிக்கு சென்ற சிபிஐ விசாரணைக் குழு, ஒடிசா காவல்துறையிடம் விசாரணை தொடர்பான ஆவணங்களை பெற்றது.


வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள்:


இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்க ஒடிசா அரசு அனுமதி வழங்கியுள்ளது. 


அலட்சியத்தால் ஏற்படும் மரணங்கள், பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்தது என ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் ஒடிசா காவல்துறை நேற்று வழக்கு பதிவு செய்தது. 


உயர்மட்ட விசாரணை குழுவின் விரிவான விசாரணையின் மூலம் மட்டுமே சதி நடந்ததா? இல்லையா? என்பதை நிறுவ முடியும் என்று அதிகாரிகள் கூறுவதால், சிபிஐயிடம் இது தொடர்பான விசாரணை ஒப்படைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கப்படுகிறது.


ரயில் விபத்துக்கு காரணம் என்ன?


ரயில்கள் சரியா செல்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய உதவும் இன்டர்லாக்கிங் அமைப்பில் ஏற்பட்ட குளறுபடி, சதி செயல் ஆகியவை ரயில் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின்படி, "சிக்னலில் ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டது. மோதல் ஏதும் ஏற்படவில்லை" என ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருந்தார். அதேபோல, விபத்தில் சிக்கிய ரயில்கள் அதிவேகமாக இயக்கப்படவிலலை என ரயில்வே போர்டு உறுப்பினர் ஜெய வர்மா சின்ஹா தெரிவித்திருந்தார். 


கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இந்த விபத்து தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பதில் சிபிஐ விசாரணை கவனம் செலுத்தும். இயந்திர கோளாறு, மனிதப் பிழை, நாசவேலை உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்திருந்தார். ஆனால், தார்மீக பொறுப்பெற்று அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் ரயில்வே அமைச்சர்கள் நிதிஷ் குமார், மம்தா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.