2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. இங்கிலாந்தின் இயற்கை அன்னை கருணை காட்டாத நிலையிலும், ஒரு வழியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி  தொடங்கிவிட்டது. முக்கியமான இறுதி போட்டியின் 2 நாள் ஆட்டம் நிறைவடைந்துவிட்ட நிலையிலும், வீசப்பட்டிருப்பது என்னமோ வெறும் 64.4 ஓவர்கள் மட்டும்தான்.


டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி


முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஏனினும் சவுதாம்ப்டன் மைதானத்தில் மேகமூட்டமான வானிலை நிலவியதால், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்வதே சரியான முடிவாக இருக்கும் என்று தெரிவித்திருந்தனர். எதிர்பார்த்தது போன்றே டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அங்கு நிலவும் வானிலை பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்த வில்லியம்சன், ஒரு சுழற்பந்து வீச்சாளர்கள் கூட இல்லாத, முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட நியூசிலாந்து அணியை களமிறக்கினார்.


ஏற்கனவே இந்திய அணியின் பிளேயிங் 11 ஜூன் 17ம் தேதி மாலை வெளியிடப்பட்டிருந்த நிலையிலும், சவுதாம்ப்டன் மைதானத்தில் நிலவும் வானிலை அணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற விவாதங்கள் நடைபெற்று வந்தன. ஆனால் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களை கொண்ட, முன்பு அறிவித்திருந்த அதே அணியுடன் களமிறங்கியது. நானும் முதலில் பந்து வீச தான் விரும்பினேன் என்று தெரிவித்த விராட் கோஹ்லி, இந்த அணி எந்த சூழலிலும் சிறப்பாக செயல்படும் என்று நம்பிக்கை அளித்துவிட்டு சென்றார்.


சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்திய ஓபனர்கள்


டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகிய இருவரின் துவக்க ஆட்டம் மீதும் பல்வேறு சந்தேகங்கள் நிலவின. மேலும் மேகமூட்டம் நிறைந்த வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வானிலை, டிரென்ட் போல்ட் டிம் சவுதி போன்று பந்தை ஸ்விங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியில் இருப்பதும், இந்திய அணியின் நிலை இன்றைக்கு பொட்டலம் தான் என்று நினைக்கத் தூண்டியது. ஆனால் பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மா சுப்மன் கில் ஆகிய இருவரும் விக்கெட் இழப்பின்றி இந்திய அணிக்கு 50 ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விக்கெட் இழப்பின்றி இந்திய டெஸ்ட் அணி அடிக்கும் 50 ரன் பார்ட்னர்ஷிப் இதுவாகும்.



பெரிய ஸ்கோராக மாற்ற தவறிய ஓபனர்கள்


ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகிய இருவருமே களத்தில் செட்டாகி ஒரு பெரிய ஸ்கோரை அடிக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் எல்லாம் ஆவலோடு எதிர் பார்த்த போது, 34 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா கைல் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 62 ரன்னுக்கு முதல் விக்கெட் விழுந்த நிலையில், மேலும் ஒரு ரன் மட்டுமே ஸ்கோர் போர்டில் சேர்க்கப்பட்ட நிலையில் 63 ரன்னுக்கு இரண்டாவது விக்கெட்டும் விழுந்தது. வந்த முதல் ஓவரிலேயே நியூசிலாந்து பந்துவீச்சாளர் வாக்னர் 28 ரன்கள் அடித்திருந்த சுப்மன் கில் விக்கெட்டை கைப்பற்றினார். 


வேகமெடுத்த நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு


தொடக்கத்தில் சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் 2 விக்கெட் இழப்பிற்கு பின்பு சீறி பாய்ந்தது. மிகத்துல்லியமான லயன் & லெங்த்தில் பந்துகளை வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணரடித்தனர். குறிப்பாக இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா 35 டாட் பந்துகளை விளையாடிய பிறகே தன்னுடைய ரன் கணக்கைத் தொடங்கினார். இந்திய அணி 88 ரன்கள் ஸ்கோர் செய்திருந்த போது புஜாராவும் ஆட்டமிழக்க, தடுமாற தொடங்கியது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு.


சரிவிலிருந்து  இந்தியாவை மீட்ட விராட் & ரஹானே



3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி இருந்தபோது கேப்டன் விராட் கோஹ்லி, துணை கேப்டன் ரஹானே ஆகிய இருவரும் கை கோர்த்தனர். மெல்ல ஆடத் தொடங்கிய இருவரும் 4வது விக்கெட்டிற்கு 147 பந்துகளை சந்தித்து 58 ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் 146/3 என்ற நல்ல ஸ்கோரை இந்திய அணி எட்டியது.


இருண்ட வானிலை - போதிய வெளிச்சமின்மை 



இந்திய அணி 120 ரன்களை எட்டியிருந்தபோது வானம் இருண்டது, அதனால் முன்கூட்டியே தேநீர் இடைவெளியை நடுவர்கள் அறிவித்தனர்.  தேநீர் இடைவேளைக்குப் பின்பு பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 134 ரன்களை எடுத்திருந்த போது 2வது முறையாக போதிய வெளிச்சம் இல்லை என நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 146 ரன்கள் எடுத்திருந்தபோது வானம் இருண்டு வெளிச்சம் குறைந்தது, இதனால் வீரர்கள் உள்ளே வெளியே என செல்வதும் வருவதுமாக இருந்தனர். குறிப்பாக 50 ரன்களை நோக்கி விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது, 3வது முறையாக வெளிச்சம் போதுமான அளவு இல்லை என்றவுடன் தனது ஏமாற்றத்தை கோஹ்லி வெளிப்படுத்தினார்.


இந்நிலையில் அதன் பின்பும் போட்டியை தொடங்கும் அளவிற்கு போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் 64.4 ஓவர்கள் வீசப்பட்டிருந்த போது 146/3 ரன்களுடன் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேப்டன் விராட் கோஹ்லி 44 (124), துணைக் கேப்டன் ரஹானே 29 (79) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் கூடுதலாக அரை மணி நேரம் ஆட்டம் நடைபெறும் என்றும் நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.