இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து, சர்வேத மல்யுத்த சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.


தற்காலிகமாக ரத்து:


இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் நடத்தப்படாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சர்வதேச மல்யுத்த சம்மேளனத்தின் நடவடிக்கையால் இந்திய மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்கள் என, சர்வதேச போட்டிகளில் உரிமை கொண்டாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என சர்வதேச மல்யுத்த சம்மேளனம், இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு கடந்த மே மாதம் 30ம் தேதி கடிதம் எழுதியிருந்தது. அதற்குள் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. 


பாலியல் புகார்:


மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தா் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று, அவா்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.  பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனின் பதவிக்காலம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 


நீதிமன்றத்தில் வழக்கு:


தொடர்ந்து,  இந்திய மல்யுத்த சம்மேளன விவகாரங்களை சமாளிப்பதற்கும், 45 நாட்களுக்குள் புதிய தேர்தல்களை நடத்துவதற்கும் இரண்டு உறுப்பினர் அடங்கிய குழுவை நியமித்தது. இதனையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது. அதன் பின்பு,  ஜூலை 11 ஆம் தேதிக்கு தேர்தலை ஒத்திவைத்து கமிட்டித் தலைவர் பூபேந்தர் சிங் பஜ்வா அறிவித்தார். 


தேர்தலுக்கு இடைக்கால தடை:


ஜூலை 11-ம் தேதி நடைபெற இருந்த இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு எதிராக, அசாம் மல்யுத்த வீரர்கள் சங்கள் வழக்கு தொடர்ந்தது. பின்பு, தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அந்த சங்கத்திற்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆகஸ்ட் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் ஹரியானா அமெச்சூர் மல்யுத்த வீரர்கள் சங்கம் வாக்களிக்க அனுமதி அளித்த முடிவை எதிர்த்து ஹரியானா மல்யுத்த வீரர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் எஸ்.பரத்வாஜ் தலைமையிலான அமர்வு, வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வரை இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.