ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்‌ஷி மாலிக், வினோத் போகத் உள்ளிட்டோர் பதக்கங்களுடன் தரையில் அமர்ந்து கண்ணீர் வடித்து வருகின்றனர். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச வந்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 


ஒரு மாதத்திற்க்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று டெல்லி போலீஸ் கூறியதால் ஹரித்துவாருக்கு போராட்டத்தை மாற்றினர். தொடர்ந்து பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து பதக்கங்களை கங்கையில் வீச இன்று மாலை மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வருகை தந்தனர்.


முன்னதாக, மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பாஜக எம்,பி. பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை கோரி பல நாட்களாக மல்யுத்த வீரர்கள் போராடி வந்தனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த வீராங்கனைகள் நேற்று முன்தினம் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகளை டெல்லி காவல்துறை முரட்டுத்தனமாக கையாண்டதை அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 


தொடர் போராட்டம் நடத்தியும் பாஜக எம்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகள்,  மிகுந்த வேதனையுடன் பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்தனர். அதன்பிறகு, கங்கையில் பதக்கங்கள் மூழ்கியதும், இந்தியா கேட் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மல்யுத்த வீரர்கள் தெரிவித்தனர். 


மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு: 


பிரஜ் பூஷணை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர். மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 


மல்யுத்த வீரர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்: 






மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம். நீதி வெல்லும், நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு அன்புமணி ட்வீட் செய்து ஆதரவு தெரிவித்துள்ளார்.