சர்வதேச ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 16-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர், 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 18 முதல் 20 வயதுடைய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினர். இதில், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் ஃப்ரீ ஸ்டைல் மகளிர் மல்யுத்த போட்டிகள் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா சார்பில் பட்ரி(65 கிலோ), சஞ்சு தேவி(65 கிலோ),பிபாஷா(76 கிலோ) ஆகிய மூவரும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர். மேலும் சிட்டோ(55 கிலோ),சிம்ரன்(50 கிலோ) ஆகிய இருவரும் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றனர். எனவே மொத்தம் 5 பதக்கங்களுடன் இந்திய மகளிர் அணி 134 புள்ளிகளை பெற்றது. அத்துடன் மகளிர் பிரிவில் இந்திய அணி அமெரிக்கா, ரஷ்யா ஆகிய அணிகளுக்கு பிறகு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ரஷ்ய அணி 134 புள்ளிகள் பெற்று இருந்தாலும் இரண்டு தங்கப்பதக்கம் வென்றதால் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் மகளிர் ஃப்ரீஸ்டையில் மல்யுத்தத்தில் 72 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சனாயே வெண்கலப்பதக்க போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டத்தால் பாதியிலேயே போட்டியில் இருந்து விலகினார். இதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட மரியம் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதேபோல் 68 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்க போட்டியில் அர்ஜூ காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் அவரும் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
முன்னதாக ஃப்ரீஸ்டையில் பிரிவு மல்யுத்தத்தில் இந்திய ஆடவர் அணி 1 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கத்துடன் ஐந்தாவது இடத்தை பிடித்தது. இந்தியா சார்பில் 61 கிலோ எடைப்பிரிவில் ரவிந்தர் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதே போல, 74 கிலோ எடைப்பிரிவில் யாஷ், 79 கிலோ எடைப்பிரிவில் கவுரவ் பலியான், 92 கிலோ எடைப்பிரிவில் ப்ருத்விராஜ் பாட்டீல், 97 கிலோ எடைப்பிரிவில் தீபக், 125 கிலோ எடைப்பிரிவில் அனிருத் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
மேலும் ஆடவர் பிரிவில் 178 புள்ளிகளுடன் ஈரான் முதல் இடத்திலும், 142 புள்ளிகளுடன் ரஷ்யா இரண்டாம் இடத்திலும், 129 புள்ளிகளுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும், 122 புள்ளிகளுடன் அசர்பைஜான் நான்காம் இடத்திலும், 101 புள்ளிகளுடன் இந்தியா ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.
மேலும் படிக்க: ”குறையெல்லாம் நிறையாய் மாற்றி..” : பாராலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் 19வயது வீராங்கனை