உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டி நடைபெற்றது. இந்த பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் அவினாஷ் சேபிள் 8.18.75 என்ற நேரத்தில் கடந்து  தகுதிப் பெற்று இருந்தார். இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


இந்நிலையில் இறுதிப் போட்டியில் அவினாஷ் சேபிள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் 8.31.75 என்ற நேரத்தில் கடந்து 11வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் 2019ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பிடித்திருந்த 13வது இடத்திலிருந்து தற்போது முன்னேறியுள்ளார். 


 






3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் தேசிய சாம்பியனாக உள்ள அவினாஷ் சேபிள் 8 முறை தன்னுடைய தேசிய சாதனையை முறியடித்துள்ளார். இவர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் 8.12.48 என்ற தேசிய சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் அவினாஷ் சேபிள் 2013-14ஆம் ஆண்டில் சியாச்சின் பகுதியில் இவர் பணியாற்றினார். அதன்பின்னர் 2016-17 ஆம் ஆண்டு முதல் இவர் தடகள வீரராக உருவாகினார். 2018ஆம் ஆண்டு  இவர் முதல் முறையாக 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவின் தேசிய சாதனையை முறியடித்தார். அப்போது 37 ஆண்டுகாள கோபால் செய்னி படைத்திருந்த சாதனையை அவினாஷ் முறியடித்திருந்தார்.


முன்னதாக உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் முதல் முறையாக நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியவர் என்ற சாதனையை முரளி ஸ்ரீசங்கர் படைத்தார். இறுதிப் போட்டியில் தன்னுடைய முதல் வாய்ப்பில் முரளி ஸ்ரீசங்கர் 7.96 மீட்டர் தூரம் தாண்டினார். அதன்பின்னர் அவர் அந்த உயரத்திற்கு மேல் தாண்டவில்லை. ஆகவே இறுதிப் போட்டியில் அவர் 7வது இடத்தை பிடித்தார். 


உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 2003ஆம் ஆண்டு அஞ்சு பாபி ஜார்ஜ் மகளிர் நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார்.  ஆடவர் நீளம் தாண்டுதலில் இந்தியர் ஒருவர் இறுதிப் போட்டிக்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால் ஸ்ரீசங்கரின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண