சீன தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த வருடம் பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் பிப்ரவரி 20-ஆம் தேதிவரை குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் நடக்கவிருக்கும் பனிச்சறுக்கு போட்டியில் காஷ்மீரை சேர்ந்த இந்திய வீரர் ஆரிப் கான் தகுதி பெற்றுள்ளார். அவர் செப்டம்பரில் திருமணம் செய்து கொள்ளவிருந்தார், ஆனால் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டதை அடுத்து ஆஸ்திரியாவிற்கு சென்று அவர் தனது பயிற்சியை மேற்கொண்டார். இதனால் அவர் தனது திருமணத்தையும் ஒத்திவைக்க முடிவு செய்தார்.
துபாயில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று, அவர் முறையே 9, 11, 11 மற்றும் 10-ஆவது இடங்களை பிடித்தார். இந்நிலையில் அவர் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை யாசின் கூறுகையில், நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது அவரது பல வருட கனவு. 2000ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஆரிப் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபாடு கொண்டார். மாநிலம் முதல் தேசிய அளவுவரை அவர் பல்வேறு பரிசுகளை பெற்றிருக்கிறார். அவர் ஒருநாள் வெல்வார் என்ற நம்பிக்கையை நான் ஒருபோதும் இழக்கவில்லை. ஆஸ்திரியாவில் ஒருநாள் பயிற்சி 20,000 ரூபாய் செலவாகும்.
இந்தியாவில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு பெரிய ஆதரவு இல்லை. நான் என் சேமிப்பை காலி செய்துவிட்டேன். என் நண்பர்களின் சேமிப்பையும் சேர்த்து காலி செய்துவிட்டேன். அது கடினமான நாட்கள்” என்றார்.
ஆரிப்பின் தந்தை குல்மார்க்கில் ஒரு பனிச்சறுக்கு உபகரணக் கடை வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி 1980களில் இருந்து பனிச்சறுக்கு மற்றும் மலையேற்ற சுற்றுப்பயணங்களை நடத்தி வருகிறார். இப்பகுதியின் ஆரம்பகால வழிகாட்டிகளில் ஒருவராகவும் அவர் இருந்திருக்கிறார்.
ஆரிப் கான் இதற்கு முன்னதாக சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா, கஜகஸ்தான், துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் இந்தியா சார்பில் பனிச்சறுக்கில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Rohit Sharma Acheivement: ஹிட்மேன் ரோஹித் சர்மா எட்டிப்பிடித்த எட்டு சாதனைகள்!