இந்தியா மற்றும் நியுசிலாந்து இடையேயயான டி20 தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராஞ்சியில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்தியா மிகச்சிறப்பாக ஆடி வென்றிருந்தது. இதன் மூலம் இந்த தொடரையும் இந்தியா வென்றிருக்கிறது.


கேப்டன் ரோஹித் சர்மா - துணை கேப்டன் கே.எல்.ராகுல் இவர்கள் இருவருமே நியுசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தார்கள். 154 ரன்களையே இந்திய அணி சேஸிங் செய்தது. அதில் ஓப்பனிங்கில் இவர்கள் இருவரும் சேர்ந்து மட்டுமே 117 ரன்களை எடுத்துக் கொடுத்து போட்டியை முழுக்க முழுக்க இந்தியா பக்கமாக திருப்பிவிட்டனர். இந்த வெற்றிகரமான பார்ட்னர்ஷிப் மூலம் ரோஹித்தும் ராகுலும் பல ரெக்கார்டுகளையும் உடைத்து நொறுக்கியுள்ளனர். அந்த பட்டியல் இங்கே..



1. நேற்றைய போட்டியில் ரோஹித்தும் ராகுலும் இணைந்து 117 ரன்களை அடித்திருந்தனர். சர்வதேச டி20 போட்டிகளில் இருவரும் இணைந்து அடித்த 5 வது சென்ச்சூரி பார்ட்னர்ஷிப் இது. இதுவே ஒரு மிகப்பெரிய சாதனைதான். சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பையில் கலக்கிய பாகிஸ்தான் கூட்டணியான பாபர் அசாமும் முகமது ரிஸ்வானும் இதற்கு முன் அதிகமாக 5 முறை சென்ச்சூரி பார்ட்னர்ஷிப்பை போட்டிருக்கின்றனர். அந்த சாதனையை ரோஹித்-ராகுல் கூட்டணி சமன் செய்துள்ளது.



(இரண்டு கூட்டணியும் ஓப்பனிங் கூட்டணி என்பதால் குழம்பி விட வேண்டும். ஒட்டுமொத்தமாகவே எல்லா ஆர்டர் பேட்ஸ்மேன்களை சேர்த்தாலும் அதிக சென்ச்சூரி பார்ட்னர்ஷிப் போட்டிருப்பது இவர்களே)


2. இந்த சென்ச்சூரி பார்ட்னர்ஷிப் விஷயத்தில் ரோஹித் சர்மா மட்டும் தனியாக ஒரு சாதனையும் செய்திருக்கிறார். அதாவது, அதிகமான சென்ச்சூரி பார்ட்னர்ஷிப்களில் இடம்பிடித்த வீரர் எனும் சாதனையே அது. ராகுலுடன் இணைந்து 5 முறை சென்ச்சூரி பார்ட்னர்ஷிப் போட்டிருக்கும் ரோஹித், தவானுடன் இணைந்து 4 முறையும் கோலியுடன் இணைந்து மூன்று முறையும் சென்ச்சூரி பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.


3. நேற்றைய 117 பார்ட்னர்ஷிப் மூலம்  ரோஹித்-ராகுல் இணை 1000 ரன்களை கடந்திருக்கிறது. சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடக்கும் 7 வது இணை இவர்களே. வெறும் 19 இன்னிங்ஸ்களில் ரோஹித் - ராகுல் இணை இந்த சாதனையை செய்திருக்கிறது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ரோஹித் - தவான் கூட்டணியே. இருவரும் இணைந்து 52 இன்னிங்ஸ்களில் 1743 ரன்களை அடித்திருக்கின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு பிறகு இரண்டு 1000+ ரன்கள் அடித்த கூட்டணியை வைத்திருப்பது இந்தியா மட்டுமே.


4.ரோஹித்தும் ராகுலும் இணைந்து இதுவரை 13 அரைசதங்களை அடித்திருக்கின்றனர். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசத பார்ட்னர்ஷிப்களை ஏற்படுத்தியிருந்த கூட்டணியின் பால் ஸ்டிர்லிங் மற்றும் கெவின் ஓப்ரையானின் சாதனையை இருவரும் சமன் செய்துள்ளனர்.



5. ரோஹித்-ராகுல் இணை டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 5 அரைசத பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதற்கு முன் எந்த இந்திய கூட்டணியும் இந்த சாதனையை செய்திருக்கவில்லை.


6. இந்த ஆண்டில் 5 அரைசத பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்திய மூன்றாவது கூட்டணியாக ரோஹித்-ராகுல் கூட்டணி பதிவாகியுள்ளது.


7. நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா தனது 25 வது அரைசதத்தை பதிவு செய்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 29 அரைசதங்களை அடித்து அதிக அரைசதங்களை அடித்தவராக விராட் கோலியே இருக்கிறார். அவருக்கு பிறகு அதிக அரைசதங்களை அடித்தவர் மற்றும் 25 வது அரைசதத்தை கடந்தவர் எனும் பெருமையையுன் ரோஹித் பெற்றார்.



8. ஒட்டுமொத்தமாக 244 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக ரோஹித் ஓப்பனராக களமிறங்கியிருக்கிறார். இதன்மூலம் அதிக போட்டிகளில் களமிறங்கிய இந்திய ஓப்பனர்களின் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண