கால்பந்து, கிரிக்கெட் அளவிற்கு உலகின் பிரபலமான விளையாட்டாக திகழ்வது டென்னிஸ். டென்னிஸ் போட்டித் தொடர்களில் மிகவும் புகழ்பெற்றதாக கருதப்படுவது விம்பிள்டன் ஓபன் தொடர். தொடர்ச்சியாக 4 முறை விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி 5வது முறையாக விம்பிள்டன் சாம்பியனாகும் கனவோடு இறுதிப்போட்டிக்கு வந்த ஜோகோவிச்சை வெறும் கையுடன் வீட்டிற்கு அனுப்பியுள்ளார், 20 வயதே ஆன ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ்.


யார் இந்த அல்காரஸ்?


ஸ்பெயின் நாட்டில் உள்ள முர்சியா நகரில் உள்ள எல் பால்மர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் அல்காரஸ். இவரது தாத்தாவும், தந்தையும் டென்னிஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். அல்காரஸ் தன்னுடைய ஆஸ்தான குருநாதராக நினைப்பது ஜாம்பவான் ரஃபேல் நடாலையே. நடால் தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாமை 2005ம் ஆண்டு கைப்பற்றியபோது அல்காரசுக்கு இரண்டு வயதே ஆகியிருந்தது.


தன்னுடைய 3 வயதில் முதன்முறையாக டென்னிஸ் ராக்கெட்டை கையில் ஏந்திய அல்காரஸ் வளர, வளர டென்னிஸ்தான் தன்னுடைய எதிர்காலம் என்பதில் மிக தெளிவாக இருந்தார். அல்காரஸின் அபாரமான திறமையை மேலும் பட்டைத்தீட்ட அவருக்கு ஒரு நல்ல வழிகாட்டியான பயிற்சியாளர் தேவைப்பட்டார். இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், ப்ரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றருவமான ஜூவாஜ் கார்லோஸ் பெராரோவின் பயிற்சியின் கீழ் அல்காரஸ் பட்டைத் தீட்டப்பட்டார்.


அமெரிக்க ஓபன்:


கடந்த 2018ம் ஆண்டு முதல் அல்காரசின் திறமையை மேலும் மேலும் வளரச்செய்தார் பெராரோ. 2018ம் ஆண்டு முதல் சீனியர் வீரர்களுக்கான சர்வதேச போட்டிகளில் களமிறங்கத் தொடங்கினார். தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் 2021ம் ஆண்டுக்குள் டென்னிஸ் தரவரிசையில் 100வது இடத்திற்குள் முன்னேறினார். அதன்பின்பு, அல்காரஸ் டென்னிஸ் வாழ்க்கையில் ஏறுமுகம் மட்டுமே.


அதன்பின்பு குரோஷியா ஓபன், ஏடிபி பைனல்ஸ், ரியோ ஓபன் ஆகியவற்றில் பங்கேற்று அசத்தினார். மியாமி ஓபன், பார்சிலோனா ஓபன் ஆகியவற்றை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த அல்காரஸ் கடந்தாண்டு நடந்த புகழ்பெற்ற அமெரிக்க ஓபன் தொடரை கைப்பற்றி ஒட்டுமொத்த டென்னிஸ் உலகையும் திரும்பி பார்க்க வைத்தார்.


நடால்தான் முன்மாதிரி:


அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை மிக இள வயதில் கைப்பற்றிய 2வது வீரர் என்ற அரிய சாதனையை அல்காரஸ் படைத்தார். அமெரிக்க ஓபனை கைப்பற்றியபோது அல்காரசுக்கு 19 வயது மற்றும் 129 நாட்கள் மட்டுமே ஆகும். தற்போது கிராண்ட்ஸ்லாம் தொடர்களிலே மிகவும் புகழ்பெற்ற விம்பிள்டன் தொடரை கைப்பற்றி அடுத்த தலைமுறைக்கான வீரர் என்பதை அல்காரஸ் நிரூபித்துள்ளார்.


அடுத்த நடால்:


அல்காரஸின் ஆட்டம் பிரபல ஜாம்பவான் ரோஜர் பெடரை போல இருந்தாலும், அல்காரஸ் தன்னுடைய ஆஸ்தான குரு மற்றும் முன்மாதிரி ரஃபேல் நடால் என்றே கூறியுள்ளார். ஏனென்றால், நடால் போல அல்காரசும் களிமண் மைதானத்தில் ஆடுவதே தனக்கு விருப்பம் என்கிறார். அல்காரசின் சிறந்த தரவரிசையாக அவர் கடந்தாண்டு நிலவரப்படி 6வது இடம் வரை முன்னேறியுள்ளார்.


ஸ்பெயின் நாட்டில் சான்டானா, ரஃபேல் நடாலுக்கு பிறகு விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய 3வது வீரர் என்ற சாதனையையும் அல்காரஸ் படைத்துள்ளார். ஸ்பெயினின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அல்காரசை அடுத்த நடால் என்றே ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர்.