காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி விவசாய பெண் பணியாளர்களுடன் இணைந்து நடனமாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஜூலை 8 ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள மதீனா கிராமத்தில் இருக்கும் விவசாய நிலங்களை பார்வையிட்ட போது அங்கு இருக்கக்கூடிய விவசாய பெண்களுடன் உரையாற்றினார். அப்போது அந்த பெண்கள் டெல்லியில் இருக்கும் அவரது வீட்டை பார்வையிட ஆர்வத்துடன் இருப்பதாக கூறினர். அதற்கு ராகுல் காந்தி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வீட்டை அரசு கைப்பற்றிவிட்டது என கூறினார்.  






இதனை தொடர்ந்து சோனியா காந்தி அந்த பெண் விவசாயிகளை மதிய உணவுக்கு தனது வீட்டிற்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கான போக்குவரத்து ஏற்பாடும் செய்யப்பட்டது. இந்த சந்திப்பு தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி சார்பாக ருசிரா சதுர்வேதி பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, மதீனா கிராம பெண் விவசாயிகளுடன் உரையாடுவது, ஒன்றாக உணவருந்துவது மற்றும் அவர்களுடன் சேர்ந்து சோனியா காந்தி நடனமாடுவதும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. பலரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.






 இதற்கு முன் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் மதீனா கிராமத்தில் விவசாயிகளை சந்தித்த நிக்ழ்வு தொடர்பாக வீடியோ ஒன்றை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 12 நிமிட வீடியோவில் அவர் விவசாயிகளுடன் உரையாற்றி அவர்களின் குறைகளை கேட்டறிவது, விவசாய நிலத்தில் நடவு செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்த டிவிட்டர் பதிவில், “ விவசாயிகள் நம் நாட்டின் மிகப்பெரிய பலம். அவர்களின் குறைகளை நாம் கேட்டறிந்து செயல்பட்டால் இந்நாட்டில் பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும்” என குறிப்பிட்டிருந்தார்.