அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌவுதம் சிகாமணி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கான காரணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறை சோதனை:
தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சரின் வீடு, அலுவலகம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணியின் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. துணை ராணுவப்படையினரின் உதவியுடன் 7 பேர் கொண்ட குழு, சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் அமைச்சருக்கு சொந்தமான 5 இடங்களிலும், அவருக்கு சொந்தமான சூர்யா கல்வி குழும கல்லூரிகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
வெளிநாடு முதலீடு தொடர்பான நடவடிக்கை?
சோதனையின் தொடக்கத்தில் சட்டத்திற்கு புறம்பாக கௌதம் சிகாமணி வெளிநாட்டில் முதலீடு செய்தது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை தான் இது என கூறப்பட்டது. ஆனால், இதையடுத்து வெளியான தகவல்கள் வேறுவிதமாக உள்ளன.
28 கோடி மோசடி?
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கௌவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்தது மூலமாக 28 கோடிக்கும் மேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விழுப்புரத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை களமிறங்கியுள்ளது. வழக்கமாக பணமோசடி வழக்குகள் தொடர்பான விசாரணையை மட்டுமே அமலாக்கத்துறை மேற்கொள்ளும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு பதிந்த வழக்கில் இடம்பெற்றுள்ள குற்றப்பிரிவுகளின் அடிப்படையில் பொன்முடி வீட்டில் தற்போது அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்ற நோக்கிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அன்றே சொன்ன அண்ணாமலை..!
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “பொன்முடி தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கொண்டு அரசு கருவூலத்திற்கு 28.4 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். திமுக ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட என்.கே.கே.பி .ராஜா மற்றும் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழக அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவிநீக்கம் செய்வாரா அல்லது செந்தில் பாலாஜியை பாதுகாப்பது போல் பொன்முடியையும் பாதுகாப்பார்களா? “ என கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் தான், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.