கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் இத்தாலியின் பெரெட்னியும் மோதினர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை பெரெட்னி 7-6 என்ற கணக்கில் வென்றார். இதன்பின்னர் சுதாரித்து கொண்டு ஆடிய ஜோகோவிச் அடுத்தடுத்து அடுத்த மூன்று செட்களை வென்றார். 6-4,6-4,6-3 என்ற கணக்கில் அடுத்த மூன்று செட்களையும் வென்றார்.
இதன்மூலம் 6-7,6-4,6-4,6-3 என்ற கணக்கில் பெரெட்னியை வீழ்த்தி 6ஆவது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன் தன்னுடைய 20ஆவது கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்று அசத்தினார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் ஃபெடரர், நடால் உடன் இணைந்து முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த மூவரும் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.
அதிலும் குறிப்பாக ஜோகோவிச் கடந்த 12 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் 8ல் பட்டம் வென்று அசத்தியுள்ளார். விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு பேசிய, “என்னுடைய சிறுவயதில் விம்பிள்டன் டிராபியை பேப்பர் உள்ளிட்ட பொருட்களை வைத்து செய்து பார்த்து விளையாடியுள்ளேன். ஒருநாள் இங்கு சாம்பியனாக இருப்பேன் என்று அப்போதே நினைத்தேன்” எனக் கூறினார். 6 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்று அதிகமாக விம்பிள்டன் பட்டத்தை வென்ற வீரர்கள் வரிசையில் ஃபெடரருக்கு(8) அடுத்த இடத்தில் உள்ளார்.
நான்கு கிராண்ட்ஸ்லாம்- 3 வீரர்கள் ஆதிக்கம்:
டென்னிஸ் உலகில் ரோஜர் ஃபெடரர்,ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் இந்த மூன்று பேர் ஆதிக்கம் செலுத்திய அளவிற்கு வேறு யாரும் செய்ததில்லை. அடுத்த மாதம் 40 வயதை எட்ட உள்ள ரோஜர் ஃபெடரர் தான் இவர்களில் மூத்தவர். இவர் 2018ஆம் ஆண்டு கடைசியாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று தன்னுடைய 20ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அடுத்து உள்ள ரஃபேல் நடால் தன்னுடைய 34ஆவது வயதில் 2020 பிரஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று தன்னுடைய 20 கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்றார். இந்த வரிசையில் மூன்றாவதாக உள்ள நோவக் ஜோகோவிச் தன்னுடைய 34ஆவது வயதில் நேற்று விம்பிள்டன் பட்டம் வென்று தன்னுடைய 20ஆவது கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் | ரோஜர் ஃபெடரர் | ரஃபேல் நடால் | நோவக் ஜோகோவிச் |
ஆஸ்திரேலியன் ஓபன் | 6 | 1 | 9 |
பிரஞ்சு ஓபன் | 1 | 13 | 2 |
விம்பிள்டன் | 8 | 2 | 6 |
யு எஸ் ஓபன் | 5 | 4 | 3 |
2003ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை முதல் முறையாக வென்று ஃபெடரர் தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். 2005ஆம் ஆண்டு ரஃபேல் நடால் பிரஞ்சு ஓப்பன் பட்டத்தை வென்று தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
கிட்டதட்ட 2003 முதல் 2021 வரை இந்த மூவரும் சேர்ந்து 60 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். டென்னிஸ் விளையாட்டில் ஒரு ஆண்டிற்கு 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடைபெறும். அதுபடி பார்த்தால் கடைசியாக நடைபெற்ற 72 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் இந்த மூவர் மட்டுமே 60 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: யூரோ கோப்பை 2020-இல், 53 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியனானது இத்தாலி அணி