ஐரோப்பிய கண்டத்தின் கால்பந்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க நடத்தப்படும் மிகவும் முக்கியமான கால்பந்து தொடர் யூரோ கோப்பை. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா கோல் அடித்து அசத்தினார். யூரோ கோப்பை வரலாற்றில் 1 நிமிடம் மற்றும் 56 விநாடிகளில் கோல் அடித்து அதிவேக கோல் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஷா படைத்தார்.
இதன்பின்னர் முதல் பாதி முழுவதும் இத்தாலி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் கை கொடுக்கவில்லை.இரண்டாவது பாதியிலும் இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தனர். ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரர் போனுசி சிறப்பாக கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். அதன்பின்னர் இறுதி வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக இரண்டு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சி எடுபடவில்லை.
எனவே யூரோ கோப்பை சாம்பியனை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை வைக்கப்பட்டது. இதில் இத்தாலி அணியில் மூன்று வீரர்கள் கோல் அடித்தனர். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் இருவரின் பெனால்டி ஷூட் அவுட்டை இத்தாலி கோல் கீப்பர் டோனருமா சிறப்பாக தடுத்தார். இதன் காரணமாக பெனால்டி ஷூட் அவுட் முறையில் இத்தாலி அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. அத்துடன் 1968ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் யூரோ கோப்பை கால்பந்து தொடரை வென்றது. கிட்டதட்ட 53 ஆண்டுகள் காத்திருந்து இத்தாலி யூரோ கோப்பையை வென்றுள்ளது. 2000ஆம் ஆண்டு மற்றும் 2012ஆம் ஆண்டு இத்தாலி அணி யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து ஏமாற்றியது.
தற்போது இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அந்த அணி வென்றதை அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை இத்தாலி அணி 34 போட்டிகளில் தோல்வி அடையவில்லை என்ற சாதனையையும் படைத்துள்ளது. நடப்பு யூரோ கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவிற்கு தங்க ஷூ பரிசாக வழங்கப்பட்டது. யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணிக்கு 103.5 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு 72.48 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: Sachin on Copa America: அர்ஜென்டினாவுக்கு வாழ்த்து...பிரேசிலுக்கு ஆறுதல் கூறிய சச்சின்...!