மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி துவங்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வீடியோ வெளியான நிலையில் அது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும்m ஜூலை 28 ஆம் தேதி, ரூ 100 கோடி செலவில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் நடக்க உள்ளது. போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், இதன் தொடக்க போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


அனைத்து கட்டுமானங்களையும் புதுப்பிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அரசு செய்திக்குறிப்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார்.






அப்போது செஸ் விளையாட்டுப் போட்டிக்கு  அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு, தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், தலைமை செயலாளர் இறையன்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் தங்களை வந்து அழைப்பார்கள் என்று கூறி, துவக்க விழாவில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.






இதற்கிடையில் நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரவு 7:30 மணிக்கு வெளியிடுகிறார் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வீடியோவை வெளியிட்டார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இந்த வீடியோ உருவாகியுள்ளது. 


மேலும் வீடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர்  ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் தமிழகத்தின் செஸ் சாம்பியன்களான விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா ஆகியோர் இடம் பெறாதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதுகுறித்து சந்தேகங்களையும், கேள்விகளையும் இணையவாசிகள் பலரும் சமூக வலைத்தளத்தில் எழுப்பியுள்ளனர். 


சதுரங்க விளையாட்டை பொறுத்தமட்டில் இந்தியாவின் புகழை உலகமெங்கும் கொண்டு சேர்த்த பெருமை விஸ்வநாதன் ஆனந்துக்கு உண்டு. இதேபோல் இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா கடந்த மாதம் நடைபெற்ற நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்றர்.  ஆன்லைன் வழியாக நடந்த மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான உலக சாம்பியனுமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். இதன்மூலம் மூன்று மாதங்களுக்குள் 2 முறை உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்தி அனைவரையும் மிரள வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும், ஏபிபி ஆப்பிலும் பின் தொடரலாம். 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண