இந்திய செய்தி நிறுவனங்கள், இணைய செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை பயன்படுத்தும் கூகுள், மெடா, மைக்ரோசாப்ட், ஆப்பிள், ட்விட்டர், அமேசான் பே ஆகிய உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதில் கிடைக்கும் வருவாயை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இதே நிலைபாட்டைதான், ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் கிட்டத்தட்ட இதே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தற்போது அமலில் உள்ள தகவல் தொழில்நுட்ப விதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களின் ஒரு அங்கமாக ஒழுங்காற்று தலையீட்டின் மூலம் இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் விளம்பரத்தின் சந்தை ஆற்றல், இந்திய ஊடக நிறுவனங்களை பாதகமான நிலையில் வைக்கிறது. இது புதிய சட்டங்கள் மற்றும் விதிகளின் பின்னணியில் தீவிரமாக ஆராயப்படும் ஒரு பிரச்னையாகும்" என்றார்.
சுதந்திரமான செய்தி மற்றும் விளம்பர நிறுவனங்களின் செய்திகளையும் தகவல்களையும் பயன்படுத்தி கொள்வதற்கான வருவாயை பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டிருப்பது குறித்து இந்திய அரசு வெளியிடும் முதல் அதிகாரப்பூர்வ தகவல் இதுவே ஆகும்.
இணையம் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களின் விரைவான வளர்ச்சியின் மூலம் உலகளாவிய டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்கள், அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. விளம்பர வருவாயையும் பார்வையாளர்களையும் கைப்பற்ற முடிந்தது.
மற்ற காரணிகளுடன் சேர்ந்து தங்களின் செய்திகள் மற்றும் தகவல்களின் மூலம் இந்த வளர்ச்சியை அவர்கள் பெற்றுள்ளதாக செய்தித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் கருதுகின்றனர்.
சமூக ஊடகம், தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியின் காரணமாக இந்த சந்தை ஆற்றலை பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெற்றதாகவும் ஆனால், பல சுதந்திரமான செய்தி நிறுவனங்கள் இதன் காரணமாக பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் மத்திய அரசு கருதுகிறது.
இதுகுறித்து விரிவாக பேசிய இணையமைச்சர், "பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நிலையில் செய்தி நிறுவனங்கள் இல்லை. எனவே, சட்டத்தின் அடிப்படையில் இதை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு முக்கியான விஷயம்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்