இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதாக எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றார்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. நிலைமை இப்படியிருக்க கடந்த வாரம் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். ஆனால் தகவலறிந்து கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தப்பியோடி நாட்டை விட்டு வெளியேறினார். முதலில் மாலத்தீவுக்கு சென்ற அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது கோத்தபய சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அதேபோல் பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்த நிலையில் அவரது வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது. ரணில் தற்போது இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை தூதரகம் வாயிலாக இலங்கை சபாநாயகருக்கு அனுப்பி இருந்தார். இதனையடுத்து அங்கு அதிபர் பதவிக்கு தகுந்த நபர் யார் என்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது.
புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக இலங்கை நாடாளுமன்றம் ஜூலை 20 ஆம் தேதி கூடும் என்றும், அன்றைய தினம் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இலங்கையில் மக்களால் மட்டுமே அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது இலங்கையிலுள்ள சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாலே அதிபர் தேர்வு செய்யப்படவுள்ளார். எனவே மீண்டும் ராஜபக்ச தரப்பின் கைமேலோங்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச, அவரது ஆதரவு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பெரும்பான்மை நபர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களின் ஆதரவு யாருக்கு செல்லும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.ரணில் விக்ரமசிங்கவா? அல்லது முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவா அல்லது புதிய ஒரு நபரா என்ற குழப்பம் நிலவி வருகிறது. முன்னதாக தன்னிடம் பல கட்சிகள் வலியுறுத்தியதால் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தானும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக தமிழ் தரப்பினர் இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் ,முஸ்லிம் காங்கிரஸ், உள்ளிட்ட சில கட்சிகள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சஜித் பிரேமதாச 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கோத்தபய ராஜபக்ச குடும்பத்தினர் வசம் இருந்தாலும் உண்மை வெல்லும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்