உலகக் கோப்பை ஃபுட்பால் தொடர் தொடங்குவதற்கான நேரம் நெருங்கிவிட்ட நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ பாடல்களும் வெளியிடப்பட உள்ளன.
உலகக்கோப்பை பாடல்கள்
ஒவ்வொரு முறையும் உலகக்கோப்பை போட்டிகள் வரும்போது, போட்டியுடன் தொடர்புடைய சில புதிய பாடல்கள் பிரபல இசைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். FIFA எப்போதுமே குறைந்தபட்சம் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ உலகக் கோப்பைப் பாடலையாவது வெளியிடுவது வழக்கம். தற்போது அவர்கள் இந்த வருடம் கத்தாரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்காக சில பாடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கத்தாரில் நடைபெற இருக்கும் 2022 உலகக் கோப்பைகாக நான்கு அதிகாரப்பூர்வ பாடல்கள் அரங்கேற உள்ள நிலையில், அவை என்னென்ன பாடல் என்பதை பார்க்கலாம்.
உலகக் கோப்பை பாடல் 1: 'ஹய்யா ஹய்யா'
இந்த முதல் பாடல் ஏப்ரல் மாதமே வெளியிடப்பட்டது. இந்த பாடல் 'ஹய்யா ஹய்யா' என்று அழைக்கப்படுகிறது, இது கார்டோனா, டேவிடோ மற்றும் ஆயிஷா ஆகியோரால் உருவாக்கப்பட்ட பாடல் ஆகும். அதே நேரத்தில் வீடியோவில் ஜினெடின் ஜிடேன், கஃபு, எடின்சன் கவானி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிற கால்பந்து நட்சத்திரங்களும் தோன்றுகிறார்கள். "அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் குரல்களை ஒன்றிணைப்பதன் மூலம், இசை - மற்றும் கால்பந்து - உலகை எப்படி இணைக்க முடியும் என்பதை இந்தப் பாடல் குறிக்கிறது" என்று FIFA வின் தலைமை வணிக அதிகாரி கே மடாதி கூறினார்.
உலகக் கோப்பை பாடல் 2: 'அர்போ'
FIFA உலகக் கோப்பை ஒலிப்பதிவில் பல்வேறு வகைகள் உள்ளன, அதில் ராப் இசை வடிவமும் அடங்கும். இம்முறை ராப் பாடலை கிம்ஸ் மற்றும் ஓசுனா இணைந்து 'அர்போ' என்ற பெயரில் தயாரித்துள்ளனர். அர்போ என்றால் 'வெல்கம்' என்று பொருள்படும். இந்த உலகக் கோப்பை பாடலுக்கான வீடியோவில், போட்டிகள் நடைபெறும் மைதானங்களைப் பார்க்கமுடிகிறது.
உலகக் கோப்பைப் பாடல் 3: 'தி வேர்ல்ட் இஸ் யுவர்ஸ் டு டேக்'
மூன்றாவது பாடலுக்கு ஆங்கிலத்தில் 'தி வேர்ல்ட் இஸ் யுவர்ஸ் டு டேக்' என்று தலைப்பிடப் பட்டுள்ளது. இந்த பாடலை லில் பேபி பாடியுள்ளார். இது பிரபலமான டியர்ஸ் ஃபார் ஃபியர்ஸ் பாடலான 'எல்லோரும் உலகை ஆள வேண்டும்' என்ற பாடலின் இசையை கொண்டுள்ளது.
உலகக் கோப்பை பாடல் 4: 'லைட் தி ஸ்கை'
நான்காவது பாடலும் ஆங்கிலத் தலைப்பில் உள்ளது, இந்த பாடல் பெயர் 'லைட் தி ஸ்கை'. இது அரபு உலகின் பிரபலமான நான்கு பெண் பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்களால் உருவாக்கப்பட்டது. அதாவது பால்கீஸ், நோரா ஃபதேஹி, மனால் மற்றும் ரஹ்மா ரியாட் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற பாடல்களைப் போலவே, அதன் பாடல் வரிகளும் உலகம் ஒன்றுசேர விரும்புவதைப் பற்றி பேசுகின்றன.