பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Exam) 2ஆம் தாளை டிசம்பர் மாதத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.


அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.


இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.


இதற்கிடையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக ஏப்ரல் 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் ‌1-க்கு 2,30,878 பேரும்‌ மற்றும்‌ தாள் 2-க்கு 4,01,886 பேரும்‌ என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்‌.


அக்டோபரில் முதல் தாள்


தாள் 1-ற்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தத் தேர்வு செப்டம்பர் 10 முதல்‌ 15 வரை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


அதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 19 வரை இரு வேளைகளில்‌ நடத்தப்பட்டது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். இவர்களுக்கான விடைக் குறிப்புகள் அக்டோபர் 29ஆம் தேதி வெளியாகின.




டிசம்பரில் 2 ஆவது தாள்?


இதற்கிடையே 2-ம் தாள் தேர்வை எழுத 4 லட்சத்து 1,886 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான தேர்வு எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுந்தது. 


இதற்கிடையே ஆசிரியர் தேர்வு வாரியத் தரப்பில், 2ஆம் தாள் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வுக் கால அட்டவணை இறுதி செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும்எனப்படும் கல்லூரிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளதால், மாணவர்களுக்கான செமஸ்டர் விடுமுறையை கணக்கில் கொண்டு தேதிகள் நிர்ணயிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.