இந்தியாவில் பொதுவாக திருமணங்கள் என்றால் மிகப் பெரிய சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக தென் இந்தியாவைவிட வட இந்தியாவில் திருமணங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். திருமணத்திற்கு முன்பாக மணப் பெண் மற்றும் அவருடைய தோழிகள், உறவினர்கள் எனப் பலருக்கும் மருதாணி வைக்கும் நிகழ்ச்சி ஆடல் பாடல் உடன் சிறப்பாக நடக்கும். இந்த நிகழ்ச்சி திருமணத்திலேயே அதிகளவில் செலவு செய்யப்படும் நிகழ்ச்சியாக இருக்கும். அந்தவகையில் பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்காக வைத்த மருதாணி ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் என்ன?
மும்பையைச் சேர்ந்த கீத் கேடக்கர் என்ற பெண்ணிற்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரின் திருமணத்திற்கு முன்பாக மருதாணி வைக்கும் நிகழ்ச்சி வழக்கம் போல் நடைபெற்று உள்ளது. அதில் அவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகை என்பதால் கிரிக்கெட் அணியின் முத்திரையுடன் மருதாணி போட ஆசைப்பட்டுள்ளார். அவருடைய வருங்கால கணவர் ஒரு தீவிர கால்பந்து ரசிகர் என்பதால் அந்த அணியின் முத்திரையையும் மருதாணியில் சேர்க்க விரும்பியுள்ளார். இந்த இரண்டையும் காண்பிக்கும் வகையில் ஒரு கையில் மணமகன் போல் கீழே வரைந்து மேலே அவருக்கு பிடித்த கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முத்திரையை வைத்திருந்தார்.
அதேபோல மற்றொரு கையில் இவருக்கு பிடித்த ஐபிஎல் கிரிக்கெட் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் முத்திரையை வைத்திருந்தார். அந்த கைக்கு கீழே மணப்பெண் போல் ஒரு உருவத்தையும் வரைந்து வைத்திருந்தார். தன்னுடைய மருதாணி மூலம் இருவருக்கும் எந்த விளையாட்டு மற்றும் எந்த அணி பிடிக்கும் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இதை பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இந்த படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் படத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கம் எடுத்து தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அத்துடன், "இந்த மருதாணி எங்கள் இதயத்தை வென்றுவிட்டது. மணமக்கள் இருவருக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருந்தது. இந்தப் பதிவிற்கு தற்போது வரை கிட்டதட்ட 3.6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன் இந்தப் பெண்ணை பலரும் தங்களுடைய பதிவுகளின் மூலம் பாராட்டி வருகின்றனர். இந்த திருமண பெண்ணின் மருதாணி இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‛கங்குலியை பின்பற்ற நினைத்த ஹர்பஜன்’ தடுத்து நிறுத்திய டிராவிட்! வெளியானது சுவாரஸ்யம்!